கவிதை மேடை

உண்மையின் வெளிச்சமே

அல்ஹாஜ் நஹ்வி I.L. நூருல் ஹக்

ஹாமிதிய்யா எனும் ஆலமரத்தின்

ஆணிவேரே !

 

முதல்வர் என்ற சொல்லுக்கு

முகவரி தந்தவரே!

சேவைச் செம்மலே!

 

ஒரு விழுதுக்கு விருது வழங்கி

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம்

பாராட்டுகளைப் பதிவு செய்து கொண்டது.

 

ஆனால் அதற்கு முன்பே,

புனித பூமியில்.. புண்ணியம் நிறை கபாவின்

கதவுகள் திறந்து

மன்னர்களுக்குத் தரும் மகிமை தந்தான் இறைவன்.

 

 

அர்ஷின் கீழ் நிற்க வைத்து

அல்லாஹ்வே அழகுப் பார்த்துக்கொண்டான்.

இது

அல்லாஹ் அளித்த

அழகிய விருது.

 

வார்த்தைகளைத் தேடித் தேடி

வாழ்த்துச் சொல்ல வந்தேன்

 

முதல்வரே!

என் வாழ்க்கையையே

வாழ்த்தாய்

சமர்ப்பித்துக் கொண்டேன்.

 

80 களின்

அனேக இளைஞர்களின் ஞாயிறு என்பது

தங்கம் தியேட்டரோடு தஞ்சமாகிப் போனது.

 

ஹாமிதிய்யாவின் அறிமுகத்தால்

தங்கம் தியேட்டரே ஹரமாஹிப் போனது.

 

அது ஒரு காலம்..

திருமண வீடென்பது

திரைப்படப் பாடல்களால் அறியப்பட்டது,

மாப்பிள்ளை ஊர்வலம்

மேளதாள ஆரவாரம்.

 

ஆலிம்களின் அறிவுரைகள்

அக்கறையோடு கேட்கப்பட்டது.

“அக்” கறையோடு நிறுத்தி வைக்கப்பட்டது.

 

ஹாமிதிய்யா அறிமுகப்படுத்தியது.

பண்பாடும் பைத் பிரிவு.

 

சப்தமில்லாமல் அரங்கேறியது.

ஒரு சமுதாயப் புரட்சி.

 

திரைப்படப் பாடல்களுக்குத் திரை

மேள தாளங்களுக்குத் தடை.

 

இது

இன்னும் தொடரும்

புனிதப் புரட்சி.

 

பத்தாம் வகுப்புப் படித்தான்,

ஒதுவேளை ஒதுங்கிப் போனது.

 

+2 சேர்ந்தான்,

மார்க்கக்கல்வி மறைந்து போனது.

 

கல்லூரி சேர்ந்தான்,

தொழுகைத் தொலைந்து போனது.

 

ஹமிதிய்யா அறிமுகப்படுத்தியது.

அழகான ஹிப்ளுப் பிரிவு,

 

பட்டாதாரிகள் – ஹிப்ளு மாணவர்கள்.

மருத்துவர்கள் – ஹிப்ளு மாணவர்கள்.

என்ஜினியர்கள் – ஹிப்ளு மாணவர்கள்.

 

இது

ஹாமிதிய்யவின்

மகிமைப் பொருந்திய

மார்க்கப் புரட்சி.

 

காலம் கட்டிவைத்த மாயத்தை

கடமை கொண்டு அகற்றியவர்.

 

தீயாய் திரிந்த

இலக்கற்ற இளைஞர்களின்

கறுப்புக் கனவுகளின் கூடாரத்தின் மீது

கல்லெறிந்தவர்.

 

ஒழுக்கத்திற்கே ஒழுக்கம்

சொல்லித்தந்தவர்.

 

இவரிடம்

அன்புக்கும் பேதம் கிடையாது.

அடிக்கும் பேதம் கிடையாது.

 

உயர்வு தாழ்வின்றி, உறவு பேதமறுத்து

சொர்க்கத்திற்கு

சொந்தங்களைச் சேர்த்தவர்.

 

மார்க்கம் சொல்லித் தந்தார்……..

நல்ல இஸ்லாமியரானோம்…..

 

மார்க்கம் புனிதம் சொல்லித்தந்தது..

நல்ல

இந்தியனானோம்.

 

உண்மையின் வெளிச்சமே!

உண்மையில்

நீங்கள்தான் எங்களின் வெளிச்சமே.!

 

மார்புப் பால் புகட்டியவள் தாயானால்,

மார்க்கப் பால் புகட்டியதால்

நீவிரும்

எங்களின் தாயே!

( 06-11-2015 )