மாட்டு இறைச்சியும் மனித நேயமும்


சேமுமு

பரப்பிய வதந்தியால் பலியான முஸ்லிம்

 டெல்லிக்கு அருகே உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் தாத்ரி தாலுகாவில் உள்ளது பிசோதா எனும் கிராமம். யாரோ பசுவைக் குர்பானி கொடுத்துவிட்டு அதன் இறைச்சியை முஹம்மது அஹ்லாக் என்பவரிடம் கொடுத்ததாகவும் அவர் அதை ஃபிரிஜ்ஜில் வைத்துச் சாப்பிடுவதாகவும் கிராமத்தில் வதந்தி கிளப்பிவிடப்பட்டது.

 உண்மையில் அவர் ஃபிரிஜ்ஜில் வைத்திருந்தது ஆட்டிறைச்சியே ஆகும். இந்துத்துவத் தீவிரவாதிகள் அவரது வீட்டில் திடீரெனப் புகுந்து தாக்கியதில் 58 வயதான அஹ்லாக் அதே இடத்தில் ஷஹீதானார்.

அவரது 70 வயது தாய் அஸ்ஹரி, 52 வயதான மனைவி இக்ரமன், 21 வயது இளைய மகன் தானிஷ், 16 வயது மகள் ஷாஹிஸ்தா ஆகியோர் காயமுற்றனர். தானிஷ் படுகாயமுற்றுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

 முஹம்மது அஹ்லாக்கை உயிர்போகும் வரை அடித்துக் கொன்று உடலை அவரது வீட்டிற்கு முன் போட்டுச் சென்ற கூட்டம், பயந்து குளியலறையில் பதுங்கியிருந்த 70 வயது தாயையும் விட்டுவைக்கவில்லை. தாழ்ப்பாளை உடைத்துவிட்டுத் தாக்கிச் சென்றுள்ளனர்.

 இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் முஹம்மது அஹ்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் இந்திய இராணுவப் படையில் சேர்ந்து சென்னை முகாமில் பணியாற்றுகிறார். இந்திய நாட்டிற்காகத் தம் மகனையே அர்ப்பணிப்பு உள்ளத்தோடு இராணுவத்திற்கு அனுப்பிய முஹம்மது அஹ்லாக்கின் நாட்டுப் பற்றுக்குக் கிடைத்த பரிசு இந்துத்துவத் தீவிரவாதிகள் அளித்த உயிர்க்கொலை !

 இந்துத்துவ தீவிரவாதிகளின் மிரட்டல்

இச்சம்பவத்தையொட்டிப் பல இந்துத்துவத் தீவிரவாத அமைப்புகளான பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதையும் முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் மாட்டிறைச்சி சாப்பிடுவோரைக் கொலை செய்ய வேண்டுமென்றும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

 மாட்டிறைச்சி உண்பவருக்கு இதுவே தண்டனை என்று சாத்வி கூறியுள்ளார். அஜய் சிங் என்பவர் இது இந்துக்கள் நாடு என்பதை மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். பிஜேபியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சக்‌ஷி மஹராஜ் பசுவைக் கொல்வோரைக் கொல்லத் தயாராகுங்கள் என்று சொல்கிறார்.

முன் நடந்த ஆட்சிகளின் போதெல்லாம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தவர்கள் மோடி ஆட்சியில் தலைவிரித்துப் பகிரங்கமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மைநிலை. இது குறித்துக் குடியரசுத் தலைவரே மறைமுகமான கருத்தை வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

 மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை விதிக்க வேண்டும், மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவது முற்றிலும் தடைவிதிக்க வேண்டுமென்று கூறும் இந்துத்துவத் தீவிரவாதிகள் உண்மைநிலையை மறந்துவிட்டார்கள் என்பது வருத்தம் தருவதாகும்.

 ஏதோ முஸ்லிம்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்பதாக முடிவு செய்துகொண்டு மதத் துவேஷ வேகத்தில் பேசுகின்றார்கள். மத வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 இந்து மதம் மறுக்காத மாட்டிறைச்சி

 உலகத்தில் மிக மிக அதிகமாக மாட்டிறைச்சியை உண்பவர்கள் கிறிஸ்தவர்களும் யூதர்களுமே ஆவரென்பதே உண்மையாகும். இந்தியாவின் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாழும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் தலித்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சியே ஆகும்.

 முதன் முதலாகக் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் சிந்து நதி தீரத்தில் தங்கியிருந்த ஆரியர்களின் முக்கிய உணவே மாட்டிறைச்சியாக இருந்திருக்கிறது.

 எந்தவோர் இந்து வேதமோ, சாஸ்திரங்களோ மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவில்லை. இன்னும் கூறப்போனால் இந்துக்களின் முக்கியக் கடவுளான இந்திரன் மாட்டிறைச்சியை விரும்பி உண்பதாகவும் அதனால் அந்தக் கடவுளுக்கு மாட்டிறைச்சியே படைக்கப்படுவதாகவுமே கூறப்படுகிறது.

அக்னி என்னும் கடவுளுக்கும் மாட்டிறைச்சியே படைக்கப்படுகிறது. மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட பழமையான பல வேத நூல்களில் மாட்டிறைச்சி உண்ணப்பட்ட செய்திகள் பல காணக் கிடைக்கின்றன.

 வேதக் காலத்தில் 250 விலங்குகளில் 50 விலங்குகள் உண்ணவும், பலிகொடுக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பசு மற்றும் காளையும் அடங்கியுள்ளன. அக்னி கடவுளுக்குப் பசு பலியிடப்பட்டுள்ளது.

 மஹா பாரதத்தில் ரந்திதேவன் என்பவன் பிராமணர்களுக்குத் தானியங்களும் மாட்டிறைச்சியும் தானமாகத் தந்துள்ளான். தைத்ரிய பிராமண் பசுவே உணவு எனச் சொல்கிறது.

 யஜ்னவாக்யா இளம் பசுவின் உணவை உண்ண எடுத்துரைக்கிறது. மிக முக்கிய நூலான மனுஸ்மிருதி மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடுக்கவில்லை. ரிக் மற்றும் அதர்வண வேதங்களில் பிராமணர்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது அதிகமாக இருந்த செய்தி கூறப்படுகிறது.

 மாட்டிறைச்சி சூப் பல வியாதிகளைக் குணப்படுத்துகிறது. பசுவின் கொழுப்பு மூட்டுவலிகளுக்கு மிக நல்லது என்று சரக் சம்ஹிதா எனும் வேதநூல் கூறுகிறது. மேகதாவில் குடதந்தா எனும் பிராமணரே மாடுகளைப் பலிகொடுத்து வந்த செய்தி காணப்படுகிறது.

 புத்த மதத்தைத் தழுவிய அசோகர் சைவமாக மாறிவிடவில்லை. அவரது உணவில் மாட்டிறைச்சியும் இருக்கவே செய்தது. ஆக இன்றைக்கும் இந்தியாவில் வாழும் இந்துக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மாட்டிறைச்சி உண்போர் இருக்கிறார்கள் என்பதே நடப்பு உண்மையாகும்.

 முதன் முதலில் இந்தியாவில் 1760 இல் மாடு அறுப்பதற்கு என்றே தனி இடத்தைத் தோற்றுவித்தவர் இராபர்ட் கிளைவ் எனும் ஆங்கிலேயர்தான். அன்றைக்கு அவர் தொடங்கி வைத்ததன் தொடர்ச்சியாக இன்றைக்கு இந்தியாவில் சுமார் 36,000 மாடு அறுக்கும் இடங்கள் செயல்பட்டுவருகின்றன.

 மாட்டிறைச்சி அறுப்பதற்கும் உண்பதற்கும் தேசிய அளவில் சட்டம் உண்டா ?

 இந்தியாவில் மாடு அறுப்பதற்கோ மாட்டிறைச்சி உண்பதற்கோ தேசிய அளவில் எந்தவொரு பொதுச் சட்டமும் இல்லை. 24 மாநிலங்களில் வேறு வேறு வகையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

 தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, குஜராத், டில்லி, பீஹார், ஆந்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பசு மாட்டை அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இராஜஸ்தான், பஞ்சாப் முதலிய மாநிலங்களில் எந்த ஒரு மாட்டையும் அறுக்கத் தடை உள்ளது. மேற்கு வங்காளத்தில் மாட்டை அறுப்பதற்கான சான்றிதழ் பெற்று மாட்டை அறுக்கலாம்.

 72 வகை சாதி மக்களின் முக்கிய உணவாக மாட்டிறைச்சி விளங்கும் மாநிலமான கேரளா, மணிப்பூர், மிஜோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் எந்தவிதச் சான்றிதழும் இல்லாமலேயே அனைத்து வகை மாடுகளையும் அறுக்கலாம்.

 மாடுகளின் எண்ணிக்கையும் அதன் விளைவுகளும்

 இந்தியாவில் ஏறக்குறைய 300 மில்லியன் மாடுகள் இருக்கின்றன. ஆனால் அவை மேய்வதற்கோ 190 மில்லியன் ஹெக்டேர் நிலங்களே உள்ளன. மேய்ச்சல் நிலங்கள் குறைவாகவும் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கின்றன.

 80 மில்லியன் மாடுகள் வயதானவையாகவும், குட்டி ஈன்றெடுக்க இயலாதவையாகவும் உள்ளன. பசியிலும் நோயிலும் சாகும் நிலையில் பல மில்லியன் மாடுகள் இருக்கின்றன. அதிலும் மாடுகளில் ஆண் இனம் வெகுவாகக் குறைந்து வருகிறது. பெண் இனம் அதிகரித்து வருகிறது

 இன்று 6 பெண்மாடுகளுக்கு ஓர் ஆண் மாடுதான் உள்ளதெனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆகவே இன்றுள்ள சூழலில் எந்த இன மாடுகளை இறைச்சிக்காகப் பயன்படுத்த வேண்டி உள்ளதென்பது சிந்திக்கத் தகுந்ததாகும்.

ஏற்றுமதியில் இந்தியா முன்னணி

இத்தகைய நிலையில்தான் உலக நாடுகளில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கிறது. வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் கடந்த ஆண்டு வரை இந்தியாதான் முதலிடம் வகித்துள்ளது.

 இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 4.8 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.

 மாடுகளை அறுக்கக்கூடாதெனும் இந்துத்துவத் தீவிரவாதிகளின் கருத்தை ஏற்று மோடி அதனைத் தடை செய்து இத்தகைய பெரும் வருமானத்தை இழக்க வைத்து இன்னும் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதாளத்திற்குள் வீழ்த்துவாரா என்பது பில்லியன் டாலர் கேள்வியாகும்.

 ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள்

வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் ஆறு நிறுவனங்களில் நான்கு இந்துக்களால்  நடத்தப்படுபவையாகும்.

 மும்பை-400021, செம்பூர், ஜாலி மேக்கர்ஸ் 92 இல் உள்ள அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் சதீஸ் மற்றும் அதுல் சபர்வால் ஆவார்கள்.

 மும்பை-400001, ஓவர்சீஸ், ரஷ்யன் மேன்ஷனில் இயங்கும் அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சொந்தக்காரர் சுனில் கபூர் ஆவார்.

 புதுதில்லி-110001, ஜன்பத், எம்.ஜி. ரோட்டில் உள்ள எம்.கே. ஆர் ஃப்ரோஸன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன் அபாத் ஆவார்.

 சண்டிகார் -160022, செக்டார் 34-ஏ, எஸ்சிஓ 62-63 இலக்கத்தில் இயங்கி வரும் பி.எம்.எல். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எஸ். பிந்த்ரா ஆவார்.

 மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து மிகப் பெரிய இலாபம் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள் யாரென்று இப்போது புரிந்துகொள்ளலாம்.

 மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்ல, மதத்துவேஷத்தின் அடிப்படையிலே இந்துத்துவத் தீவிரவாதிகள் மாட்டிறைச்சிப் பிரச்சனையை அரசியல் இலாபம் கருதிச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

 மாட்டிறைச்சியால் எழுந்த முன்னாள் கலவரங்கள்

 மாட்டிறைச்சியைப் பிரச்சனையாக்கிக் கலவரத்தைத் தூண்டுவதென்பது இது முதன்முறையல்ல. 1870 இல் சிக் குகா எனும் நம்தாரி இனத்தவர் பசுவைக் காத்தல் எனும் பெயரால் கலவரத்தில் இறங்கினர்.

 1882 இல் தயானந்த சரஸ்வதி என்பவர் கோரக்‌ஷினி சபா என்ற ஒன்றை ஏற்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்.

 1880-90 களில் இந்தியாவில் பல இனக்கலவரங்கள் நடந்துள்ளன. ஆஸம்கார் (1893), அயோத்யா (1912), ஷஹாபாத் (1917) முதலிய இடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன.

 ஆகவே மாட்டிறைச்சி பிரச்சனை இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே இந்துத்துவத் தீவிரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சுதந்திரத்திற்குப் பின்னரும் அவ்வப்போது இப்பிரச்சனை தலைதூக்க முயன்றுள்ளது. ஆனால் இப்போதோ எப்போதுமில்லாத அளவிற்குத் தலை விரித்தாடுகிறது.

 மாட்டிறைச்சியை எதிர்ப்போரின் தகுதிகள்

 2005 பிப்ரவரியில் ஜுனகாத் ஸ்வாமிநாராயண் கோயில் சாமியாக பக்தி ஸ்வரூப் மற்றும் அவரைச் சார்ந்த மூவர் பாலியல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.

2006 மார்ச்சில் ஜபல்பூரைச் சேர்ந்த விகாஸ் ஜோஷி எனும் ஸ்வாமி விகாசானந்த் என்பவர் ப்ளூ ஃபிலிம் 60 சி.டி.களுடனும், மூன்று பெண்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டனர்.

 2009 நவம்பரில் மச்சீசப் பெருமாள் கோயிலைச் சேர்ந்த காஞ்சீபூரம் தேவநாதன் பக்தைகளிடம் பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் வீடியோக்கள் பதிவு செய்தது முதலான குற்றங்களுக்கு ஆளானார். 

2010 மார்ச்சில் ஸ்ரீமுரத் த்விவேதி என்ற இச்சதாரி சந்த் ஸ்வாமி பிமானந்த் என்பவர் விபச்சார விடுதி நடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். மஹேந்திர கிரி எனும் துன்னு பாபா 24 வயது திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

 2010 ஏப்ரலில் சுவாமி நித்யானந்தா பெங்களூருவில் நடந்த பல்வேறு பாலியல் முறைகேட்டிற்காகத் தேடப்பட்டு ஹிமாச்சலப் பிரதேசத்தில் கைதுச் செய்யப்பட்டார்

  2013 செப்டம்பரில் ஜோத்பூரில் ஸ்வாமி ஆஸ்ரம் பாபு என்பவர் மைனர் பெண்ணைக் கற்பழித்தமைக்காகக் கைதுச் செய்யப்பட்டார்.

2014 நவம்பரில் சந்த ராம்பால் என்பவர் தனது முறையற்ற பாலியல் நடவடிக்கைகள் வெளிவந்த விவகாரத்தில் கொலை செய்ததற்காக ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 2015 ஆகஸ்டில் சாரதி பாபா என்பவர் பாலியல் முறைகேடுகளுக்காகவும், ஆள் மாறாட்டம் செய்தமைக்காகவும் ஒடிசா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 கர்நாடக முதல்வர் சித்தாராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மற்றும் அசோக் சிங்கால் முதலியோருடன் நெருக்கமாக உள்ள பண்டிட் சுவாமி இராகேஸ்வரா பாரதி பல்வேறு பாலியல் குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளார்.

 இவற்றை இங்கு பட்டியலிடுவதில் காரணம் இருக்கிறது. இத்தகைய சாமியார்கள்தாம் மாட்டிறைச்சி உண்பதற்கும் மாடுகள் அறுப்பதற்கும் எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு குரல் கொடுப்போரின் யோக்கியதை இத்தகையதாகத்தான் உள்ளதென்பது வேதனையிலும் வேதனையாகும்.

 அதே சமயத்தில் விவேகானந்தர் போன்றோர் மாட்டிறைச்சி உண்போர்களுக்கு ஆதரவாகவே கருத்துக்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாட்டிறைச்சியை அரசியலாக்க முயல்வோருக்கு ஆதரவு கிடைக்காது

 இந்தியத் திருநாட்டில் மாட்டிறைச்சி உண்போர் எண்ணிக்கை அதிக அளவிலேயே உள்ளது. உணவு என்பது வசிக்கும் இடத்தையும், செய்யும் தொழிலையும் பொருத்ததாகவே இருந்து வந்துள்ளது.

 உணவு என்பது மதச் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. தாங்கள் விரும்பும் உயர்தரப் பொருளையே கடவுளுக்குக் காணிக்கையாகத் தரும் மனோபாவம் உள்ள நாடு இது.

 தனது கண்ணையே பிடுங்கிக் கடவுளுக்கு வைத்த கண்ணப்ப நாயனாரைப் போற்றும் நாடு இது. பெற்ற மகனையே அறுத்துக் கடவுளுக்குக் கறி சமைத்துக் கொடுத்த புராணம் வழங்கப் பெறும் நாடு இது.

 இந்த வகையில் தாங்கள் உயர்வாகக் கருதும் மாடுகளையே கடவுளுக்குப் பலி தந்து அந்த இறைச்சியையே உண்டு மகிழும் மக்களைக் கொண்ட நாடு இது என்றாலும் மனித நேயத்தில் மாண்போடு உயர்ந்து விளங்கும் அற்புதத் திருநாடு இந்நாடு.

 மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொலை செய்பவர்கள் மனிதர்களை மட்டும் கொல்லவில்லை. மனித நேயத்தையும் கொன்று வருகிறார்கள்.

 நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும், கட்டுக்கோப்பிற்கும் ஊறுவிளைவிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல தங்கள் மதத்துக்கே அவப்பெயர் தேடித்தருகிறார்கள்.

 மனித நேயத்திற்கு உலை வைக்கும் வகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னதமான சித்தாந்தத்தை அடித்து நொறுக்கும் வகையில் மாட்டிறைச்சிப் பிரச்சனையை அரசியலாக்க முயல்வோர் செயலுக்கு இந்தியப் பெரு நாட்டின் அருமைக் குடிமக்கள் எள்முனை அளவுகூட ஆதரவு தர மாட்டார்கள் என்பதே உறுதியாகும்.

 தகவல் : முதுவை ஹிதாயத்

குறிப்பு : இந்த ஆக்கம் குறித்தக் கருத்தைப் பதிய , காண