துன்பம் தரும் துரித உணவு


டாக்டர்.D.முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H.

“இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்  ”குர்ஆன் 2:195 

மரணத்தை நோக்கி இழுத்து செல்லும், துரித உணவுகள் (Fast Food ) சாப்பிடலாமா ?இன்று துரித உணவுகள் என்னும் ஜங் உணவுகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. மக்களின் அதிவேக வாழ்க்கை முறைகளை, தங்களுக்கு லாபமாக நினைத்த பெரும் பன்னாட்டு நிறுவனங்களும்,கார்பரேட் சக்திகளும் இணைந்து இந்த துரித உணவு கலாசாரத்தை எல்லா நாடுகளிலும் ஊடுருவ செய்து விட்டார்கள்.

விளைவு , மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை தொலைத்து நிற்கிறார்கள்.பொதுவாக இது போன்ற உணவுகளில், ஹராம் என்று அதிகாரபூர்வமான முஸ்லிம் சம்மேளனத்தால் தகுந்த காரணத்துடன் அறிவிக்கப்பட்டதையோ அல்லது அப்பட்டமாக ஹராம் என்று நமக்கு தெரிவதையோ , முஸ்லிம் சாப்பிடவே கூடாது என்பது எல்லோரும் அறிந்தது .

ஆனால் இந்த வகையில் ஹராம் என்று அறிவிக்கபடாத , அதன் அட்டையில் ஹலால் முத்திரை பதிக்கப்பட்ட துரித உணவுகளை உண்ணலாமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்று உறுதியாக தெரிந்தால், மேற்கண்ட குர்ஆன் வசன அடிப்படையில், அவைகளை தவிர்க்க வேண்டும்..இது பற்றி சற்று விவரமாக பார்ப்போம்.

துரித உணவில் , மனிதனுக்கு தேவையான ஊட்டசத்து மதிப்பு மிக மிக குறைவாக உள்ளது. ஆனால் தேவையற்ற அதே சமயம் தீங்கு விளைவிக்கும் அதிக கலோரி , அதிக saturated கொழுப்பு, transfat என்னும் மிக கெட்ட கொழுப்பு,  அதிக சர்க்கரை உள்ளன . இதில் வைட்டமின் , தாதுக்கள் மிக குறைந்த அளவிலே உள்ளது.

எனவே , இந்த உணவு மனிதனுக்கு அதிக ஆரோக்கிய கேட்டையே தருகிறது. பொதுவாக இதை உண்பவர்கள் , குறிப்பாக குழந்தைகள், வேறு நல்ல உணவான பழங்கள் , காய்கறிகளை ,பால்களை தவிர்க்கவே செய்கிறார்கள்..இதனால் ஏற்படும் தீங்குகளை பார்ப்போம்.

அதிக உடல் பருமன் obesity :

ஒவ்வொரு மனிதனுக்கும், அவனின் தொழிலை பொறுத்து, ஒரு நாளைக்கு இத்தனை கலோரி தான் உணவில் எடுக்க வேண்டும் என்ற மருத்துவம் சார்ந்த தினசரி கலோரி தேவை என்று ஒன்று உள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட கலோரிகள் ஒரு நாள் முழுக்க சாப்பிடும் எல்லா உணவு மூலம் தான் கிடைக்க வேண்டும்.

ஆனால், இந்த துரித உணவை சாப்பிடுவதால், ஒரு நாளைக்கு தேவையான கலோரிகள், ஒரு வேலை உணவிலே கிடைத்து விடுகிறது.இதில் கலோரி மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இதை வழக்கமாக உண்பவர்கள் , மிக விரைவில் அதிக உடல் பருமன் கொண்டவர்களாக ஆகி விடுகிறார்கள்.

அமெரிக்காவில் 4 முதல் 19 வயதிற்குட் பட்டவர்களில் மூன்றில் ஒருவர் இந்த உணவையே உண்பதால், வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு 6 பவுண்ட் எடை கூடுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

அதுபோல National Institute Helath என்னும் அமைப்பின் அங்கமான NHLBI (National Heart Lung Blood Institue ) ஒரு மனிதன் வாரம் இரண்டு முறைக்கு மேல் இந்த உணவை தொடர்ந்து உண்பவனாக இருந்தால், 15 வருடங்களில் 10 பவுண்ட் எடை கூடிவிடும்” என்று எச்சரிக்கிறது.இந்த அதிக உடல் பருமனால்,இரண்டாம் வகை சர்க்கரை, இருதய கோளாறு,பக்கவாதம், புற்று நோய் வரவும் வாய்ப்பு உண்டு.

இருதய நோய் :

வாரத்திற்கு இந்த உணவை நாலு தடவைக்கு மேல் உண்பவர்களுக்கு, இருதய நோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் உள்ளது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. இந்த உணவில் உள்ள, கெட்ட கொழுப்பான saturated fat மற்றும் transfat போன்றவற்றால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஷ்டரால் அளவு கூடுவதோடு ,

நல்ல கொலஷ்டரல் அளவு வெகுவாக குறைகிறது. , இதனால், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. மேலும் ,இதனால் உயர் இரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.

இரண்டாம் வகை சர்க்கரை நோய் :

பொதுவாக இந்த வகை உணவை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் , இயல்பாகவே உடல் பயிற்சி இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.இந்த உணவால் உடல் பருமன் ஏற்பட்டு,உடல் பயிற்சி இல்லாததால்,இன்சுலின் எதிர்ப்பு தன்மை ஏற்பட்டு , சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தப்  படாத  சர்க்கரை நோய் அதிக நாள் நீடித்தால்,கண், கிட்னி , மூளை, கால்கள், நரம்பு மண்டலம் , இருதயம் போன்றவையும் சிறிது சிறிதாக பாதிக்கலாம்.

பக்க வாதம் :

இந்த உணவால் ஏற்படும் அதிக கொலஷ்டரால்,உடல் பருமன் ,உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் எல்லாம் சேர்ந்து, பக்கவாதம் வர காரணியாக அமைகிறது.அதிக கெட்ட கொலஷ்டேரால் , மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களை அடைத்து, அதன் மூலம் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

அல்சர் நோய் :

இந்த துரித உணவை தொடர்ந்து உண்டால், அல்சர் என்னும் வயிற்று புண் வரலாம். நேரம் தவறி உணவு உண்பதும்,இதில் உள்ள அளவுக்கு அதிகமான காரமும், சமசீரற்ற உணவு கலைவையுமே காரணம்.

குடம்ப ஒன்று கூடல் இல்லாமை :

இந்த உணவு முறையை பின்பற்றும் குடும்பத்தில், அவரவர் தனியாக இந்த உணவுகளை,அலுவலின் போதும், வாகனம் ஓட்டும் போதும் உண்பதால், குடம்ப சகிதம் உணவு உண்டு ஏற்படும் மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.

நேரம் தவறி சாப்பிடுதல் :

இந்த உணவை எப்போதும், எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று உள்ளதால், குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கம் இல்லாமல் போவதோடு, உணவு உண்பதின் ஒழுக்கமும் சீர்கெடுகிறது.

பண தெண்டம் :

பொதுவாகவே இந்த உணவு, வீட்டில் சமைத்து உண்ணும் உணவை விட மிக விலை கூட இருப்பதால்,இதனால் வரும் நோய்க்கான செலவு ஆகியவற்றால்,பண செலவு அதிகமாகிறது.

ஜீரண கோளாறு :

இந்த உணவை தொடர்ந்து சாப்பிடுவதால், அஜீரணம், , பசியின்மை, உணவு நச்சு ஏற்படுகிறது.

அத்தியாவசிய ஊட்டசத்து பாற்றாக்குறை :

இந்த வகை உணவில் சமசீரான சத்துக்கள் இல்லாததால்,ஊட்டசத்து பாற்றக்குறை ஏற்பட்டு அதன் விளைவுகளால் உடல் பாதிக்கும்.

மனநிலை மாற்றம் :

இந்த உணவில் அதிக கெட்ட கொலஷ்டரால் இருப்பதாலும், இவை மூளையில் ஒரு வகை இரசயான மாற்றத்தை ஏற்படுத்துவதாலும் , மன அழுத்தம், மன சோர்வு , மறதி, போன்ற மன நிலை சம்பந்தமான நோய்கள் வரலாம்.

இந்த உணவை மூடிவைக்க பயன்படும் கவரில் உள்ள ஒரு வேதிப்பொருள், இந்த உணவில் கலந்து, மனித உடலில் வேறு வேதி பொருளாக மாறி ,உடல்நலத்தை பாதிக்கும்.தன்மை கொண்டது.

இந்த உணவு சம்பந்தமாக எடுக்கப்பட்ட எல்லா ஆய்வுகளின் முடிவுகளுமே இந்த உணவுக்கு எதிராகவே உள்ளன.ஒரு ஆய்வு கூட இந்த உணவை பரிந்துரைக்க வில்லை

Canadian Journal Of Cardiology என்னும் கனடாவை சேர்ந்த இருதயவியல் பத்திரிகை ‘ஒரு முறை இந்த உணவை சாப்பிட்டாலே , உடலில் உள்ள இரத்த குழாய்கள் பாதிப்பு அடையும் ‘ என்று குறிப்பிடுகிறது.

2005இல் கனடாவில் நடந்த ஆய்வில்,”இந்த உணவகங்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் மக்களின் இறப்பு விகிதம், மற்ற ஏரியா மக்களின் இறப்பு விகிதத்தை விட 2.52 மடங்கு அதிகம் ‘ என்று குறிப்பிடுகிறது.

University Of California செய்த ஆய்வில் ‘இந்த உணவகங்கள் இருக்கும் ஏரியா வில் வசிக்கும் மக்களின் உடல் எடை, மற்ற மக்களை ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறது.

எனவே ஆரோக்கிய கேடை தரும் இந்த உணவை தவிர்த்து, சமச்சீர் உணவை உண்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து, நமது கைகளாலே நமக்கு தீங்கு நேராமல் பார்த்து கொள்வோமாக

“நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர் “ குர்ஆன் 4:29.

இந்த ஆக்கத்திற்கான கருத்தை காண, பதிய