வரலாற்றுப் பெருநகர் காயல்பட்டினம் - கட்டுரை
காயல் மகபூப்
தென்னகத்தில் இஸ்லாத்தின் நுழைவுவாயிலான காயல்பட்டினம் வரலாற்றுச் சிறப்பும் பாரம்பரிய பெருமையுமிக்க நகர்.
அரபுத்- தமிழ் கலாச்சாரத்தின் இணைப்புப் பாலமாகத் திகழும் இந்நகர் ஆன்மீகத் திருநகர் மட்டுமல்ல - அருந்தமிழுக்குப் பெருமை சேர்த்த பெருநகர். இந்நகரின் வரலாற்றுப் பெருமையையும் அமைவிடச் சிறப்பையும் அறிந்து கொள்வோமா?
அமைவிட சிறப்பு:
டெல்லி ஆதிக்கம் தெற்கே பரவியது, சோழ அரசு வீழ்ந்தது. அதனிடத்தில் கடல்வலிமை மிக்க ஓர் ஆதிக்கம் ஏற்பட்டது. அது தான் பாண்டிய ஆதிக்கம். மதுரை அதன் தலைநகரம். கிழக்கு கடற்கரையிலுள்ள காயல்பட்டினம் அதன் துறைமுக நகரம்.
சிற்றரசு தான் எனினும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்கோ போலோ சீனாவுக்கு போகும் வழியில் கி.பி.1288ல் ஒரு முறையும், சீனாவிலிருந்து வரும் வழியில் கி.பி.1293ல் மறுமுறையும் காயல்பட்டினத்திற்கு வருகை தந்திருக்கிறார். அரபு நாடுகளிலிருந்தும் சீனாவிலிருந்தும் கூட்டம் கூட்டமாக கப்பல்கள் வந்து போகும் பேரும் புகழும், பேரழகும் மாண்பும் பெற்ற மாநகரம் இது என மார்க்கோ போலோ வர்ணித்துள்ளார்.
இந்தியாவிலேயே கிழக்கு கடற்கரை யோர ஊர்களில் உற்பத்தியாகி இங்கிருந்து ஏற்றுமதியாகும் சிலந்தி வலை போன்ற மெல்லியரக மஸ்லின் துணி பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய புகழ் பெற்ற ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’வில் இடம் பெற்றுள்ள புகழ்மிக்க வரிகள் இவை.
இப்படிப்பட்ட சிறப்பிற்குரிய காயல்பட்டினம்,
தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடிக்கு 33கி.மீட்டர் தெற்கிலும், திருச்செந்தூருக்கு 8கி.மீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது இதன் புவியியல் அமைவிடம்
8.57ஸ்சூ, 78.12ஸ்நு மன்னார் வளைகுடா கடற்கரையில் கடல் மட்டத்திலிருந்து 19அடி யரத்தில் அமைந்துள்ளதாகும்.
காயல்பட்டினத்திற்கு அரபுகள் வருகை:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே தென்னகத்தோடு அரபுலகிற்கு வர்த்தக தொடர்புகள் இருந்து வந்துள்ளது.
கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் அரபுகளும், கிரேக்கர்களும் காயல்பட்டினத்திற்கு வந்ததற்கான சான்றுகளும் ரோமானிய ரவுலட்டுகள், பானை ஓடுகளும் சாட்சியாக உள்ளன.
காயல்பட்டினம் கடற்கரையை யொட்டியுள்ள கற்புடையார் பள்ளியில் கிடைத்த கல்வெட்டு, பவித்திர மாணிக்கப் பட்டினம், காஹிறூர், காயல்கரை என்பதெல்லாம் காயல்பட்டினத்தை குறிப்பவை என்பதை சான்று பகர்கின்றன. கற்புடையார் பள்ளிக்கும் கடற்கரைப் பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி காலத்திலேயே இஸ்லாம் தென்னகத்தில் நுழைந்து விட்டது என்பதையும் அதன் நுழைவாயில் காயல்பட்டினம் என்பதையும் கிடைத்துவரும் ஆதாரங்களும் ஆய்வுகளும் உறுதிப் படுத்தி வருகின்றன.
மன்னர் சேரமான் பெருமான் நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தில் இணைந்து, தென்னகத்தில் இஸ்லாத்தை பரப்ப நாயகத் தோழர்கள் சிலருடன் திரும்பி வரும் வழியில் இறந்ததும், இறக்கு முன்பே மன்னர் பொறுப்பிலிருந்த தன் மருமகனுக்கு கடிதம் கொடுத்தனுப்பி, நாயகத் தோழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க பணித்ததும், கேரளாவின் கொடுங்கலூரில் பள்ளிவாசல் கட்டி அதற்கு சேரமான் பெயர் சூட்டியிருப்பதும் வரலாற்றில் பதிந்துவிட்டவை.
"திருநெல்வேலி சரித்திரம்’’ எழுதிய கால்டுவெல் பாதிரியார், ‘கி.பி.9ம் நூற்றாண்டில் முகம்மதிய அரபுகள் மலபர் கரையில் குடிபுகுந்கனர், அவர்கள் குடிபுகுந்த முதல் இடம் காயல்பட்டினம். பின்னர் அவர்கள் கடலோர பகுதிகளுக்கும் இலங்கைக்கும் பரவினர் ’ என குறிப்பிடுகிறார்.
கி.பி.842ல் கலிபா அல்வாதிக் காலத்தில் எகிப்திலிருந்து ஹஸரத் அபூபக்கர் சித்திக் (ரலி) வம்சா வழியில் தோன்றிய அறிஞர் முஹம்மது கல்ஜி தலைமையில் மரக்கலத்தில் வந்தவர்கள் காயல்பட்டினத்தில் இறங்கியதும், குத்பா பெரிய பள்ளியை கி.பி.843ல் கட்டியதும், இறந்தபின் இப்பள்ளியின் அடக்கத்தலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதும் வரலாற்றுச் செய்திகளாகும்.
இலங்கையில் முஸ்லிம் வரலாறு தொடக்கம்:
காயல் பட்டினத்திலிருந்து இலங்கை பேருவினையில் குடிபுகுந்தவர்கள் தான் இலங்கையில் முஸ்லிம் வரலாற்றை தொடங்கியவர்கள் என்பதை இலங்கையின் வரலாற்று ஆய்வாளர்களான டாக்டர் டென்ஹாம் சர்பொன்னம்பல ராமநாதன், டாக்டர் புரோஹியர், ஸர் சைமன் காயிசிட்டி, ஸர் அலெக்ஸாண்டர் ஜான்ஸ்டன் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். இவை இலங்கை அரசு ஆவணங்களில் பதிவாகி உள்ளன.
அறிஞர் செய்யது ஜமாலுதீன் தலைமையில் வருகை :
காயல் பட்டினத்திற்கு அரபியர்களின் இன்னொரு வருகை கி.பி.1284ல் நிகழ்ந்துள்ளது.
செய்யது ஜமாலுத்தீன் தலைமையில் கப்பலில் வந்தவர்கள் காயல்பட்டினத்தில் தங்கி வாழ்ந்ததும் முகம்மது கல்ஜி கி.பி.843ல் கட்டிய பள்ளியையொட்டி கி.பி.1303ல் பெரிதாக பள்ளி கட்டியதும் நவீன காயல்பட்டினத்தை வடிவமைத்து உருவாக்கியவர் இவரே என்பதும் இந்நகரின் பெருமைமிக்க அடுத்த அத்தியாயங்கள்.
நபிகள் நாயகம் வம்சா வழியில் வந்த செய்யது ஜமாலுத்தீன் காயல்பட்டினம் வந்த சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுந்தர பாண்டிய தேவர் வந்தவர்களை அன்போடு உபசரித்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார் என்பதும்.
கி.பி.1286ல் சீனாவிற்கான பாண்டிய நாட்டின் தூதராக செய்யது ஜமாலுத்தீனை மன்னர் அனுப்பிவைத்ததையும், அவரது தம்பி செய்யது தகிய்யுத்தீனை முதல் அமைச்சராக நியமித்ததையும், மன்னர் சுந்தர பாண்டிய தேவர் 1292ல் மறைந்த போது செய்யது ஜமாலுத்தீன் சுல்தான் ஆக பாண்டிய நாட்டை சிறிதுகாலம் ஆட்சி செய்து. கி.பி.1303ல் குலசேகர தேவரிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு பாரசீகம் சென்றதையும் ‘ஹிஸ்டரி ஆஃப் இந்தியா’ நூலில் ஸர் எலியட் குறிப்பிட்டுள்ளார்.
வாஸ்கோடகாமா காயல்பட்டினத்தை ‘முஸ்லிம் ராஜ்யம்’ என தமது """"ரொடெய்ரோ’’ நூலில் குறிப்பிட்டள்ளதையும், இது முத்துக்குளிக்கும் நகர் என நிக்காலோ காண்டி உள்ளிட்ட ஜரோப்பிய ஆய்வாளர்கள் எழுதியதையும் மார்க்கோபோலோ தவறாமல் பதிவு செய்துள்ளார்.
இபுனு பதூதா கண்ட ‘பத்தன்’:
இபுனு பதூதா கி.பி.1348ல் பத்தன் வந்ததாக தமது ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பத்தன் (காஹிர்பத்தன்) காயல்பட்டினம் தான் என்பதற்கான ஆதாரங்கள் பெரிய பள்ளி மையவாடி , சிறுபள்ளி மையவாடி கல்வெட்டுகளில் உள்ளன.
அமெரிக்காவின் மினெஸ்ட்பிடா பல்கலைக்கழகம் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் கி.பி. 8முதல் 12ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இஸ்லாத்தை வேரூன்ற செய்த ஊர்களாக காயல்பட்டினமும், நாகூரும் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயல், பழைய காயல், புன்னக் காயல், கொற்கை என்பதெல்லாம் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரே ஊர்கள் என """"ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் கொற்கை’’ என்ற நூலில் டி.சுந்தர்ராஜ் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இவை பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்த துறைமுகம் என்பது தெரியவருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் தாமிர பரணியின் முகத்துவாரத்தில் இத்துறைமுகம் அமைந்துள்ளதை மார்கோ போலோ , கால்டுவெல் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய கொற்கைக்கும் கடலுக்கும் இடையில் நீண்ட தூரம் உள்ளதும் இதை உறுதிப்படுத்துகிறது.
கி.பி.1553ல் திருமலை நாயக்கர் காயல்பட்டினம் முஸ்லிம்களுக்கு வழங்கிய செப்புபட்டயம் இதற்கு ஆதாரமாகும்.
காயல் பட்டினத்தைப் பற்றி மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வாளர்களைத் தவிர சுவாமி சுத்தானந்த பாரதியார் (தமிழுணர்ச்சி), கர்னல்ஸர்ஹென்றியூல், ரஷீதுத்துன்,(ஜாமிஉத்தவாரீகை) வாஸிம் (தஸ்ஜியதுல் அம்ஸார்) போன்றோர் மிகச்சிறப்பாக குறிப்பிட்டுள்ளனர்.
நமது காலத்தில் இலங்கையின் டாக்டர் எம்.எம்.உவைஸ், முத்தமிழ் காவலர் டாக்டர் கி.ஆ.பெ.விசுவநாதம், ஹாபிஸ் எம்.கே.செய்யது அஹமது, முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீப் போன்றோர் காயல்பட்டினம் பற்றி ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர்கள்.
பேராசிரியர் எஸ்.எம்.அபுல்பறக்காத் எஸ்.ராமச்சந்திரன் போன்றோர் கல்வெட்டுக்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர்கள்.
இறைநேசர்களும் இறைஇல்லங்களும்:
எண்ணற்ற இறை நேசச் செல்வர்கள் தோன்றியுள்ள ஆன்மீகத் திரு நகரான காயல்பட்டினத்தில் 28பள்ளிவாசல்களும் 25பெண்கள் தைக்காக்களும் உள்ளன.
ஆண்களுக்கான அரபிக் கல்லூரிகள் மூன்று, பெண்களுக்கான அரபிக் கல்லூரிகள் மூன்று, பல ஹிப்ளு மத்ரஸாக்கள், மக்தப்கள் உள்ளன.
அருந்தமிழுக்கு சேவை யாற்றிய இந்நகரில் நூற்றுக் கணக்கான புலவர்கள் தோன்றி அழியா காவியங்கள் படைத்துள்ளனர்.
கவிச் சக்கரவர்த்தி கம்பனை விட அதிகமான பாடல்கள் பாடிய புலவர் நாயகம் என்ற ஷேக்கனாப் புலவர், அருணகிரி நாதரின் திருப்புகழுக்கு மறுபுகழ் எழுதிய வரகவி காசிம் புலவர், சீர்திருத்தக் கருத்துக்களை அந்தக் காலத்திலேயே பாடலாக்கித் தந்த ஷாம் ஷிஹாபுத்தீன் ஒலி, சென்னைப் பலகலைக் கழக புத்தக பரிபாலனத் தலைவராகப் பணியாற்றி 40ஆண்டுகளில் 20கோடி வாக்கியங்களுக்கு மேல் பதிப்பித்த கண்ணகுமது மகுதூம் முஹம்மது புலவர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
செத்தும் கொடை கொடுத்த வள்ளல் சீதக்காதி, வள்ளல்கள் லெப்பப்பா ஒலிகள் என எண்ணற்ற புரவலர்களும் இந்நகரில் தோன்றி இரவா புகழ் பெற்றுள்ளனர்.
மகளிர் கலைக்கல்லூரி, 6ஆண்,பெண் மேநிலைப்பள்ளி பள்ளிகள், ஏராளமான ஆரம்ப பள்ளிகளும் இங்குள்ளன.
காயல் பட்டினத்தில் 1886ஜனவரி 27ல் பஞ்சாயத் அமைக்கப்பட்டது. அது 24-4-1952ல் பேரூராட்சியாகவும் 14-6-2004ல் நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
இந்நகரில் 1923ல் ரயில் சேவை தொடங்கப்பட்டது 1955ல் குழாய் மூலம் குடிநீர் கிடைத்தது 1955ல் மின் இணைப்பு தரப்பட்டது. 1990ல் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது.
12.5சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்நகரில் 12942வீடுகள் உள்ளன 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 40542மொத்த வாக்காளர்கள் 28313சராசரி கல்வியறிவு 79சதவீதம்.
தமிழை அரபு லிபியில் எழுதும் அரபுத் தமிழ் தோன்றிய இந்நகரில் ஹிஜ்ரி 1296லேயே திருக்குர்ஆனுக்கு அரபுத் அமிழில் விளக்கவுரை வெளிவந்துவிட்டது இதற்கு 72ஆண்டுகளுக்கு பின்பே தமிழில் விளக்கவுரையான தப்ஸீர் வெளியானது.
காயல்வாசிகள் கால்படாத நாடுகளே இல்லை என்ற சிறப்பு பெற்ற காயல்பட்டினத்தில் காவல் நிலையம், மதுக்கடை, திரையரங்கு, தங்கும் விடுதி இல்லை என்பது ஆச்சர்யமான செய்திதானே?
( 23-11-2012 )