ரியாத் காயல் நல மன்றத்தின் 55-வது குளிர்கால பொதுக்குழுக் கூட்டம் கடந்த 03/11 அன்று நடைபெற்றது. அக்கூட்டம் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியாவது…
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 55-வது குளிர்கால பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி கடந்த 03-11-2017 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ரியாத் (சுலை) EXIT 16-இல் அமைந்துள்ள இஸ்திராஹ அல் கும்மாவில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
வரவேற்பு :
காலை 07.30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் பத்ஹா – லக்கி மற்றும் R.T. ரெஸ்டாரண்ட் அருகில் வருகைதர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்விடத்திற்கு அழைத்து வந்தனர், சொந்த வாகன வசதி உள்ளவர்கள் தமது நண்பர்களுடனும், குடும்பதாருடனும் வந்து சேர்ந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் சுவைமிக்க தேநீர் வழங்கி உபசரித்து அகமகிழ வரவேற்றனர். வருகைதந்த உறுப்பினர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தி கொண்டனர்.
புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பி தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராக இணைத்து கொண்டார்கள்.
விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தாங்கள் நடத்தவிருக்கும் போட்டிகளுக்கான ஆயத்த வேளைகளில் வெளியரங்க விளையாட்டு மைதானத்தில் தம்மை ஈடுபடுத்தி கொண்டனர்.
குடும்ப சங்கம நிகழ்வு நீச்சல் போட்டியுடன் குதூகலமாக துவங்கியது. ஜும்ஆவுடையே நேரம் நெருங்கியதும் அனைவரும் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று குத்பா உரையில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.
பொதுக்குழு கூட்டம் :
மன்ற 55-வது பொதுக்குழுக் கூட்டம் பிற்பகல் 1.00 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சிகளை செயற்குழு உறுப்பினர் சகோதரர் இப்ராஹீம் பைசல் அவர்கள் தொகுத்தளித்தார்.
மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் முஹம்மது அலி அவர்கள் இறைமறை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார் தொடர்ந்து அய்யம்பேட்டையை சார்ந்த சகோதரர் பக்கீர் முஹம்மது அவர்கள் இன்னிசை விருந்தளித்தார்.
தலைமை உரை :
தலைமை உரை ஆற்றிய மன்ற தலைவர் சகோ. நூஹு அவர்கள் இம்மன்றத்தின் செயல்பாடுகளை பெண்களும் அறிந்துகொள்வதற்காகவே இந்த குடும்ப சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட Women And Kids Fund (WAKF) திட்டத்தை பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்.
இத்திட்டத்தின் மூலம் சவூதி ரியால் 4,900/- நிதியாக பெறப்பட்டது, இந்த நிதியினை நகரில் பிரத்யேக திட்டம் செயல்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும் மத்திய அரசின் திட்டங்களின் ஒன்றான ஏழை எளிய மக்கள் பயனடையும் பொருட்டு நமது நகரில் ஷிஃபா ஒருங்கிணைப்பில் செயல்படும் மிகவும் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் Generic Medical Store பற்றி விளக்கினார். தொடர்ந்து மன்ற பாடகர் சகோதரர் சேக் அப்துல் காதர் அவர்கள் இன்னிசை விருந்தளித்தார்.
மன்ற செயல்பாடுகள் :
மன்றத்தின் செயலாளர் சகோ. முஹ்சின் அவர்கள் மன்ற செயல்பாடுகளை பற்றி விளக்கி பேசினார். புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், பெருநாளன்று இரவு நாட்டுக் கோழி வழங்கிடும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம்,
இமாம் மற்றும் முஅத்தீன்களுக்கு நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜுபெருநாளில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects, பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் Women And Kids Fund (WAKF) ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளித்தார்.
கருத்துரை :
மன்ற துணை தலைவர் சகோதரர் கூஸ் அபூபக்கர், மன்றத்தின் மூத்த உறுப்பினரும் மன்றத்தின் ஆலோசனை குழு உருப்பினரும்மான சகோதரர் ஹைதர் அலி மற்றும் தம்மாம் காயல் நல மன்றத்தின் செயலாளர் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
குறிப்பாக சகோதரர் இஸ்மாயில் அவர்கள் தமது கருத்துரையில் ரியாத் காயல் மன்றத்தின் சீரிய செயல்பாடுகளை பாராட்டி பேசியதோடு, இம்மன்றம் தம்மாம் காயல் நல மன்றம் துவங்க ஒரு முன்மாதிரியாக திகழ்ந்ததாக கூறினார். எம்மன்றதின் Women And Kids Fund (WAKF) திட்டத்தினை தமது மன்றத்திலும் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்போவதாக கூறினார்.
நன்றியுரை :
குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த இனிய பொதுக்குழு கூட்டத்தை சீரிய முறையில் நடத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த செயற்குழு/பொதுகுழு உறுப்பினர்கள், பெண்கள் நிகழ்சிகளை ஒருங்கிணைத்த சகோதரிகள், உணவு, குடிநீர், தேநீர் மற்றும் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவைகளுக்கு தாரளமாக அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், தம்மாம்லிருந்து வந்து கலந்து கொண்ட அனைவர்களுக்கும் செயற்குழு உறுப்பினர் சகோ. ஆதில் தனது நன்றி கலந்த பாராட்டுக்களை கூறி நிறைவு செய்தார்.
பிரார்த்தனை :
ஹாபிழ் சதக் ஸமீல் அவர்கள் துஆ ஓத, கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
கேக் :
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோ. இப்ராஹீம் பைசல் அவர்களுடன் பணிபுரியும் சவூதி பிரஜை சகோ. பதர் அல்-ராஷித் அவர்கள் நமது மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டி பரிசளித்த மன்ற இலச்சினை பதித்த அழகிய கேக் தனை நமது மன்ற தலைவர் சகோ. நூஹு அவர்கள் கையால் வெட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எம்மன்ற செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் முகமாக கேக் வழங்கிய சகோதரருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
காயல் களரி சாப்பாடு :
மத்திய உணவாக காயல் பாரம்பரியமிக்க சுவைமிகு களறி கறி, கத்தரிக்கா மாங்கா புளியாணம் பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க களரி சாப்பாடு எம்மன்ற ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. நுஸ்கி தலைமையில் ரியாத் ETA குழும சமையல் வல்லுனர்கள் சிறப்புற தயார் செய்திருந்தனர். எம்மன்றத்தின் பொதுகுழு உறுப்பினர் சகோ. தீபி அவர்களின் அனுசரணையில் சுவை மிக்க ஐஸ்கிரீம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
குர்ஆன் கிராஅத் போட்டி :
மௌலவி M.M. நூஹு அல்தாஃபி அவர்கள் குர்ஆன் கிராஅத் போட்டியினை தம்மாம் காயல் நல மன்ற செயலாளர் சகோ. இஸ்மாயில் அவர்களுடன் இணைத்து நடத்தினார்கள். போட்டியில் சிறுவர் சிறுமியர் ஆவலுடன் கலந்துகொண்டனர்.
விளையாட்டு போட்டிகள் :
அஸர் தொழுகை கூட்டாக நிறைவேற்றிய பின் அனைவருக்கும் தேநீர், மற்றும் பொதுக்குழுவுக்கென பிரத்தியோகமாக, மன்ற துணை பொருளாளர் சகோ. வெள்ளி சித்தீக் அவர்களால் ஊரிலிருந்து கொண்டுவரப்பட்ட மிக்சர் மற்றும் நானகத்தா பரிமாறப்பட்டது.
தொடர்ந்து வெளியரங்க விளையாட்டு போட்டிகள் மைதானத்தில் உறுப்பினர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர் செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் சகோ. இப்ராஹீம் பைசல், சகோ. ஆதில், சகோ இர்ஷாத், சகோ. சூஃபி, சகோ. இஸ்மத் நவ்ஃபல் மற்றும் பொதுகுழு உறுப்பினர் சகோ. கோடக்கா பைசல் அஹமத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
சிறுவர்/பெரியவர் போட்டிகள் :
பெரியவர்களுக்கு வெளி விளையாட்டரங்கில் கால்பந்து டை பிரேகர் (Tie-Breaker), Aim and Shoot, Lemon and Spoon, Pizza Corner ஆகிய போட்டிகள் மிகுந்த உற்ச்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது. மக்ரிப் நேரம் நெருங்கியதும் கூட்டாக தொழுகை நிறைவேற்றியபின் விளையாட்டு போட்டிகள் மின்னொளியில் தொடர்ந்து நடைபெற்றது.
மறுபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. Running Race, Frog Race, Balloon Fight போட்டிகளில் சிறுவர்கள் மிகுந்த சந்தோசத்துடனும் சுறுசுறுப்புடனும் கலந்துகொண்டனர்.
பெண்கள்/சிறுமியருக்கான போட்டி :
பெண்களுக்காக பிரத்யேகமாக அமைந்துள்ள தனி அரங்கில் பெண்கள் மற்றும் சிருமியர்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. இந்த போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர்.
விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இனிதாக நிறைவுற்ற பின் கூட்டாக இஷா தொழுகை நிறைவேற்றப்பட்டது.
உறுப்பினர்கள் அறிமுகம் :
வெளியரங்க போட்டிகள் நிறைவுற்றபின் புதிய உறுப்பினர்கள் அறிமுகத்துடன் உள்ளரங்க நிகழ்ச்சிகள் துவங்கியது, நிகழ்ச்சியினை சகோ. ஹைதர் அலி அவர்கள் தொகுத்து வழங்கினார். மன்ற பாடகர் சகோ. சேக் அப்துல் காதர் அவர்கள் அருமையான நகைச்சுவை கலந்த பாடல்களை பாடி அனைவரையும் உற்சாகம் ஊட்டினார்.
மன்ற உறுப்பினர் சகோ. ஷாதுலி அவர்களின் மகன் ஹாஃபிழ் தாவூத் மற்றும் மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் M.A.C. அஹமத் தாஹிர் தங்களது இனிய குரலில் கிராஅத் ஓதி அனைவரயும் உள்ளம் குளிரச் செய்தனர். அதனை தொடர்ந்து எண்களை வைத்து விளையாடும் BINGO விளையாட்டு நடைபெற்றது.
பரிசளிப்பு விழா :
போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான பரிசளிப்பு விழா தனியாக நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மன்ற நிர்வாகிகள் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இரவு உணவு :
இரவு உணவாக மட்டன் சால்னாவுடன் பரோட்டா, இடியாப்பம் மற்றும் சவ்வருசி பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க உணவினை மன்ற ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. நுஸ்கி தலைமையில் ரியாத் ETA குழும சமையல் வல்லுனர்கள் சிறப்புற தயார் செய்திருந்தனர்.
வினாடி வினா போட்டி :
செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் ஏற்பாட்டில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இத்துடன் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவுற்றதை அடுத்து உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது இருப்பிடங்களுக்கு விடைபெற்று சென்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
அனைத்து படங்களையும் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்
https://drive.google.com/open?
செய்தியாக்கம் : தைக்கா சாஹிப்,
நிலைப்பட உதவி : கோடக்கா பைசல் அஹமத் மற்றும் அஹ்மத் ஷா.