
காயல்பட்டினம் கோமான் ஜமாத்தில் கோமான் மேலத் தெரு, கோமான் நடுத்தெரு , கோமான் கீழத் தெரு ஆகிய மூன்று தெருக்கள் அமைந்துள்ளன.
கோமான் மொட்டையார் பள்ளியை தலைமையாகக் கொண்ட இஜ்ஜமாத்தினர், குறிப்பாக இளைஞர்கள் பல்வேறு அறப்பணிகளை அவ்வப்போது ஆற்றி வருகினறனர்.



அண்மையில் இவர்களால் துவக்கப்பட்ட கோமான் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் உள்ளூர் அளவில் கிரிக்கெட் போட்டியினை மிகச் சிறப்பாக நடத்தினர்.
இந்நிலையில், இவர்களின் பொதுப் பணிகளின் ஓர் அங்கமாக தற்போது பசுமைக் கோமான் என்ற தலைப்பில் இவர்கள் ஒரு புரட்சிக்கு வித்தூண்டி உள்ளனர் .



மரங்கள் நிறைந்த, இயற்கை எழில் சூழ்ந்த காயல் நகரை உருவாக்கி காண்பதற்கு திட்டமிட்டுள்ள இவர்கள், துவக்கமாக தங்கள் பகுதியில் இதற்கான முன்னுரையை எழுதி உள்ளார்கள்.
ஆம் , 14-09-2016 அன்று நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் அல்ஹாஜ் A. லுக்மான் B.A., அவர்களின் தலைமையில், பசுமைக் கோமான் என்ற வாட்சப் குழுமத்தை உருவாக்கி, பசுமைப் புரட்சிக்கான கருத்து பரிமாற்றங்களை செய்யத் துவங்கியுள்ளனர்.
இதன் விளைவாக 20-09-2016 அன்று கோமான் பள்ளிவாயில் அருகிலும், அதன் சுற்றுப்புற பகுதியிலும் மரக் கன்றுகளை நட்டி, தங்களின் லட்சியம் நிறைவேற முதலடி எடுத்து வைத்துள்ளார்கள்.



இது குறித்து அவர்களை நாம் வினவிய போது, பசுமை நிறைந்த காயலை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என்றும் , அந்நோக்கத்தை நிறைவேற்றும் எண்ணத்துடன் தங்களின் பயணம் தொடரும் என்றும் மகிழ்வுடன் தெரிவித்தனர் .


கோமான் ஜமாத்தினரின் பசுமைப் பயணம் தடையின்றி, தொய்வின்றி தொடர்ந்து வெற்றி முகட்டை தொட இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள் .
நிலைப்படம் மற்றும் தகவல்: ஹாஜி மலங் , கோமான் தெரு
September 25th, 2016