முழு மதுவிலக்கே நமது இலக்கு என்ற இலட்சிய முழக்கத்துடன் நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார் மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் திருமிகு. வைகோ.


இந்நடைபயணத்தின் மூன்றாவது நாளான 14-12-2012 வெள்ளிக்கிழமை அன்று, காயல்பட்டினம் வருகைதந்த அவருடன் சீருடை அணிந்த 1200 தொண்டர்களும் அணிவகுத்து வந்தனர்.

நடந்து வரும் வைகோவிற்கு முன்னால், பரப்புரை செய்தவாறு வேனில் அவருடைய உரையை ஒலிபரப்பிக் கொண்டும், பிரசுரங்களை வழங்கிக் கொண்டும் சென்றார்கள்.

காயல்பட்டினம் நுழைவாயிலான வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி அருகே, கல்லூரி தாளாளர் ஹாஜி வாவு.செய்யிது அப்துர் ரஹ்மான், செயலர் ஹாஜி எம்.எம் முஹ்தஜிம் மற்றும் துணைசெயலர் ஹாஜி எஸ்.ஏ.ஆர். இஸ்ஹாக் ஆகியோர் வைகோவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்கள்.

திரளாக குழுமியிருந்த கல்லூரி மாணவிகளுக்கு மத்தியில் வைகோ உரையாற்றினார்.

‘எதிர்கால இலட்சிய சமுதாயத்தை உருவாக்கும் முழுப் பொறுப்பு இன்றைக்கு மாணவியராக இருக்கும் உங்களுக்கே உண்டு. இன்று மதுவின் கொடுமையால் நம் நாடு சீரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டவனைச் சென்று நலம் விசாரிக்கச் சொன்ன பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், மதுப்பழக்கத்தால் உடல்நலம் கெட்டோரை, நலம் விசாரிக்க அனுமதிக்கவில்லை.
திப்புசுல்தானின் ஆட்சி காலத்தில் அரசு வருமானத்திற்காக மதுக்கடைகளை திறக்கச் சொன்ன அமைச்சர்களின் ஆலோசனையை, அவர் நிராகரித்தார். எல்லா மதங்களும், எல்லா நெறிகளும் மதுவை வெறுக்கின்றன.
மது நமது உடல் நலத்திற்கும், நம்முடைய ஒழுக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். எனவேதான் இதை எதிர்த்து மதுக்கடைகளை மூட வேண்டி நானும் எனது தொண்டர்களும் கால்கடுக்க நடந்து செல்கிறோம்.
இன்னும் ஒரு பதினைந்து, இருபதாண்டுகள் கழித்து, நீங்கள் குடும்பத்தை நிர்வகிக்கக் கூடிய, சமுதாயத்தை உருவாக்கக் கூடிய சிற்பிகளாக வருவீர்கள். அப்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். அந்நேரத்தில் இப்படி தெருவோரத்தில் நடந்து வந்து ஒருவன் பிரச்சாரம் செய்தான் என்று என்னை நினைத்துப்பார்த்துக் கொள்ளுங்கள்.’

இவ்வாறும் இன்னும் பல தகவல்களையும், அறிவுரைகளையும் வைகோ வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி சசிகலா நன்றி தெரிவித்து பேசினார்.

கல்லூரி வரவேற்புக்குப் பின், கே.எம்.டி. மருத்துவமனை அருகே அவர் வரும்பொழுது, நகர மதிமுகவின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வரவேற்பில் நகர மதிமுகவின் நிர்வாகிகளான பத்ருத்தீன், எம்.ஏ. காதர் அலி, மீராசாகிபு மரைக்காயர், கவிஞர். எஸ்.ஏ. நெய்னா, ரியாசுத்தீன், பாட்சா, முகம்மது அப்துல் காதர், ஏ. பட்டாணி, இ. கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வழிநடைப்பயணத்தில் பங்கேற்ற அனைவர்களுக்கும், குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகளை உள்ளடக்கிய பைகள் வழங்கப்பட்டன. அதில் பயணத்தில் வந்தோரை வரவேற்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

கே.டி.எம். தெருவில் வரும்போது, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், பேரவை அருகே வைகோவினை வரவேற்று, அதன் நிர்வாகிகள் வாழ்த்தி, நமதூர் இரயில் நிலைய நடைமேடையை விரிவாக்கம் செய்ய முயற்சிக்கக் கோரி வைகோவிடம் மனு அளித்தனர்.


பின்னர் சீதக்காதி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.


‘மதுக்கடைகளால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தை விட, மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஆண்டுக்கு கிடைக்கக் கூடிய மொத்த இலவசங்களின் மதிப்பு ரூபாய் பதினாறாயிரம் மட்டுமே. ஆனால், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவன் குடிப்பதால், அவன் இழக்கும் தொகை சில இலட்சங்கள்.
பதிமூன்று வயதிலேயே சிறுவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகுவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. நகரங்களில் பெண்கள் மது அருந்தத் துவங்கியுள்ளார்கள். மதுவெறியால் தகப்பன் மகளையும், மகன் தாயையும் பெண்டாட துணிந்து, அவை கொலையில் முடிந்த சம்பவங்கள் அண்மைக்கால பத்திரிகைச் செய்திகள்.
நமது நாடு இந்த கேடு கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட்டால்தான் உருப்படும். காயல்பட்டினத்தில் மதுக்கடைகள் இல்லை. என்றைக்கும் இருந்தது இல்லை என்ற தகவல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் தாய்த்திருநாடு முழுதும் காயல்பட்டினமாகாதா? என்று ஏங்குகிறேன்.

காயல்பட்டினத்தின் மக்கள் நான் வருகின்றபோதும், வெளியூரில் இரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் என்னை சந்திக்கும்போதும் கட்சிகளை மறந்து ‘மாமா’ என்று அழைத்து பாசத்தைப் பொழிகின்றார்கள்.
நான் இந்த ஊரின் மீது எப்போதும் பற்றோடு பாசத்தோடு இருப்பவன். உங்களின் விருந்தோம்பல் பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். வாவு வஜீஹா கல்லூரி நடத்தும் வாவு குடும்பத்தினர், திருமண விழா ஒன்றில் அறிமுகமான எல்.கே.எஸ். மாமா ஆகியோர் எனது நட்புக்கும், மதிப்புக்கும் உரியவர்கள்.’
இவ்வாறு வைகோ உரைநிகழ்த்தினார்.
பின்னர் நமதூர் முதன்மைச் சாலை ( மெயின்ரோடு ) வழியாக ஆறுமுகநேரி நோக்கி செல்லும் போது மிகுந்த களைப்பில் எல்.எஃப் ரோட்டில் சாலையில் அமர்ந்து ஓய்வெடுத்தார். அங்கு மகளிர் சுயஉதவிக் குழுவைச் சார்ந்தோர் டி.சி.டபிள்யு ஆலை உருவாக்கும் மாசு குறித்து வைகோவிடம் மனு அளித்தனர்.


களைப்பு மிகுதியால், நம் இணையதளத்தின் ஆலோசகர் ஏ.கே. பீர் முகம்மது இல்லத்தில் மீண்டும் அரைமணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
நமது இணையதளத்தின் நிறுவனர் ஹாஜி. எஸ். அக்பர்ஷா அவர்களோடு கைபேசியில் தொடர்பு கொண்டு வைகோ அவர்கள் பேசினார். நிறுவனர், வைகோவின் நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்தார்.
வழிநெடுக பெண்களும், ஆண்களும், சிறுவர், சிறுமிகளும் வழங்கிய உற்சாக வரவேற்பை ஏற்றவாறு விடைபெற்றுச் சென்றார். வைகோ, ‘காயல்பட்டினத்தில் தமக்கு வழங்கப்பட்ட வரவேற்பு மறக்க முடியாதது’ என குறிப்பிட்டார்.
வரவேற்பு மற்றும் கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர மதிமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
மதுப்பழக்கத்தால் தள்ளாடும் தமிழகத்தை மீட்டெடுக்க போராடும் வைகோவின் பயணம் வெல்க என வாழ்த்துவோம்.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி : முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com
December 18th, 2012