சங்கை மிக்க ரமலான் சர்ச்சை மிக்க ரமலானாக மாறலாமா


அல்ஹாஜ் மக்கி நூஹு தம்பி

இன்னும் சில நாட்களில் புனித ரமலான் நம்மைத் தேடி வருகிறது. நம் எல்லோருக்கும் புனித ரமலான் மாதத்தை அல்லாஹ் நசீபாக்கி வைப்பானாக!

நோன்புநோற்பது, திருமறை ஓதுவது,இரவில் நின்று வணங்குவது, நோன்பு திறப்பது, தஹஜ்ஜத் தொழுவது, தான தர்மங்கள் செய்வது, இவற்றுக்கு எண்ணிலாத நன்மைகளை அள்ளிக்குவித்து,

அல்லாஹ்வின் நல்லருளை பெற்று, ரய்யான் எனும் சிறப்பு வாசல் வழியே சொர்க்கம் செல்லும் பாக்கியத்தை அல்லாஹ் நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக!

நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ரஜப் மாதத்திலேயே ரமலானை வரவேற்க தயாராகி விடுவார்கள்.

ரஜபிலும், ஷா’பாணிலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக! புனிதரமலானை அடையும் பாக்கியத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக! என்று துஆ செய்வார்கள் என்று உலமாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

ஆனால் சமீப காலங்களாக, இந்த சங்கை மிக்க ரமலான் சர்ச்சை மிக்க ரமலானாக, குடும்பங்களை பிரிக்கக் கூடிய ரமலானாக மாறியது ஏன்? நோன்பு மூன்று வேறு, வேறு நாட்களில் ஆரம்பமாகிறது.

தராவீஹ் தொழுகை 8 ரகாத் என்றும், 20 ரகாத் என்றும், தராவீஹ் என்று ஒரு தொழுகையே இல்லை என்றும், மூன்று விதமாக பேசுகிறோம்.

ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லை ஆயுளில் ஒருமுறை கொடுத்தால் போதும் என்றும் பேசி வருகிறோம்.

தஹஜ்ஜத் தொழுகை, சஹர் நேர ஒலிபரப்பு, ஒளிபரப்பு இவற்றால் திசை திருப்பப்பட்டு அந்த தொழுகை, அந்த நேரத்தில் செய்ய வேண்டிய முக்கியமான அமல்கள் காணாமல் போய்விடுகின்றன.

லைலதுல் கதர் இரவு மாறி மாறி வருகிறது. பெருநாள் தொழுகைக்கு முன்கூட்டியே கடற்கரையில் இடம் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. அதுவும் மூன்று நாட்கள் முப்பெரும் விழாவாக தனித் தனியாக நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஆறு நோன்புகள் பொடுபோக்காக விடப்படுகிறது.

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காட்டத் தந்த வழி என்று இதற்கு எல்லோருமே ஆதாரம் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள் என்பதுதான் வேதனை நிறைந்த உண்மை.

ரமலான் பிறையும், ஷவ்வால் பிறையும், இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க நாணி சில சமயம் ஓடி ஒளிந்து கொள்கின்றன. நம் புறக்கண்களுக்கு அவை தெரிவதில்லை. ஏன் இந்த மாற்றம்?

எங்கே நம் உலமாக்கள்? எங்கே இந்த நபிமார்கள் வாரிசுகள்? அரசியல் கட்சிகள் போல், அதன் தலைவர்கள் போல் நம் உலமாக்களும் மேடை மாற்றி, மேடை மாறி பேசும் செய்திகள், இந்த சமுதாயத்துக்கு என்ன பாதை வகுத்துக் கொடுக்கிறது? எங்கே நம்மை அழைத்து செல்கிறார்கள்?

ஒரு இறை, ஒரு மறை ,ஒரு பிறை, இந்த கோட்டுக்குள் எல்லோரும் இருப்பதுதான் இஸ்லாம் என்றால், அதை எல்லா உலமாக்களும் ஒரே தொணியில் சொல்லுங்கள். எங்களை பிரித்து வைப்பதால் நீங்கள் சொர்க்கம் போய்விட முடியாது.

நாளை மறுமையில் உங்களை நாங்கள் அடையாளம் காட்டுவோம். அப்போது நீங்கள் கைசேதப் படுவீர்கள். நாங்கள் தப்பித்துக் கொள்வோம்.

இது நான் சொல்லவில்லை அல்லாஹ் சொல்கிறான்.நபிகள் நாயகம் சொல்கிறார்கள் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். நாளை நமக்கு முன்னால் நம் செயல் ஏடுகள் விரிக்கப்பட்டு, அதை நாமே படித்துப் பார்க்க சொல்லி,அல்லாஹ் சொல்லும்போது நமது குட்டு அங்கே வெளிப் பட்டுவிடும்.

எனவே எனதருமை உலமாக்களே! இந்த மன மாச்சரியங்களுக்கு ஒரு முடிவுகட்டுங்கள். எங்களுக்கு நல் வழி காட்டுங்கள்!அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக! இந்த புனித ரமலானை புண்ணிய ரமலானாக நாம் அனுஷ்டித்து அவனது அருள் கொடையை நிரப்பமாக பெறுவதற்கு வல்ல நாயன் கிருபை செய்வானாக!ஆமீன்.ரமலான் முபாரக்.

இந்த ஆக்கம் பற்றிய கருத்துக்களை பதிய, காண இங்கே அழுத்தவும்