தடுப்பூசி - மருத்துவத் தகவல்


Dr. D. முஹம்மது கிஸார் M.B.B.S, D.C.H.

தவறாமல் தரப்பட வேண்டிய தவணை

நோய்களை குணப்படுத்துவதை விட, அந்த நோய் வராமல் தடுப்பது சுலபம். மேலும் முழுமையாக குணப்படுத்த முடியாத, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல தொற்று நோய்களை தடுப்பூசிகள் மூலம் அந்த நோய் வராமல் தடுக்கலாம்.

'தடுப்பூசி குழந்தைகளின் பிறப்புரிமை' ஏதாவது ஒரு தடுப்பூசி, ஏதோ ஒரு காரணத்திற்காக தரப்படாமல் இருந்து, அதன் பின்னர் அக்குழந்தை அந்த நோயால் பாதிக்கப்பட்டால்... அந்த பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆதங்கத்திற்கு பெற்றோர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்.

தடுப்பு எப்படி?

தடுப்பூசி என்பது எந்த கிருமி (வைரஸ், பாக்டீரியா) நோயை உருவாக்குகிறதோ, அதே கிருமியிலிருந்து தயாரிக்கப்படும் Antigen என்ற பொருள், உடலில் ஊசி மூலமோ அல்லது வாய் மூலமோ செலுத்தப்பட்டு, உடல் அந்த ஆண்டிஜனுக்கு பதில் கூறும் விதமாக, ஆன்டிபாடி(Antibody)ஐ சம்பந்தப்பட்ட கிருமிக்கு எதிராக உருவாக்குகிறது.

இந்த ஆன்டிபாடி இரத்தத்தில் இருந்து கொண்டு, பின்னர் அதே கிருமி உடலில் நுழையும் போது, அதனை அழித்து, நோய் வராமல் தடுத்து விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சில கிருமிகளுக்கு ஒரே முறை தடுப்பூசி போட்டாலே போதுமான ஆன்டிபாடி உருவாகி விடுகிறது. (உதாரணம் சின்னம்மை) சில கிருமிகளுக்கு, திரும்ப, திரும்ப தடுப்பூசி போட்டு அந்த ஆன்டிபாடி அளவை நிலை நிறுத்த வேண்டி இருக்கும். உதாரணம் DPT 3 Dose,,மஞ்சள் காமாலை, B3Dose, போலியோ சொட்டு 5Dose. இவ்வாறு ஒரு தடுப்பூசியோ அல்லது பல தடுப்பூசிகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடி சில மாதங்களுக்கோ அல்லது சில வருடங்களுக்கோ பின்னர் தன் வீரியத்தை படிப்படியாக இழக்கக் கூடும்.

இந்த இழப்பைத் தவிர்க்க சில ஊசிகள் ஊக்குவிப்பு டோஸ் ஆக போடப்படுகிறது. இதற்கு Booster Doseஎன்று பெயர்.  உதாரணம்:


DPT/DT-1 1/2வயதில், 4-5வயதில்
போலியோ சொட்டு 11/2வயதில், 4-5வயதில்
மஞ்சள் காமாலை 'B' 5வருடம் கழித்து ஒரு டோஸ்
டைபாய்டு 3வருடம் கழித்து


செலவு மிச்சம்... உளைச்சல் கம்மி

தடுப்பூசி போடுவது பொருளாதார ரீதியாக அதிக பலன் தரக் கூடியது. தடுப்பு ஊசி முறைகளுக்காக அளிக்கப்படும் நேரமும், செலவும் நோயுற்ற பிறகு சிகிச்சை செய்யத் தேவைப்படும் செலவையும் நேரத்தையும் விட குறைவாகும்.

மேலும் நோயுற்றோருக்கு ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சல், நோயினை குணப்படுத்தும் சிகிச்சைகள், நோயினால் ஏற்பட்ட பக்க விளைவு, நோய்க்கான மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகியவைகளை இந்த தடுப்பூசி முறை தடுக்கிறது.

உதாரணம்: மூளைக்காய்ச்சல் ஊசி சுமார் 500ரூபாய். ஆனால் அந்த ஊசி போடாததால் ஏற்படும் நோய் தீர்க்க ஆகும் செலவு பலமடங்காகும். அத்துடன் மூளை பாதிப்பு, கைகால் செயல்படாமல் போதல், தலையில் நீர் கோர்த்தல், பக்கவாதம் போன்றவற்றின் மூலம் நமக்கும், நம் குடும்பத்தினருக்கும் உண்டாகும் மன உளைச்சல் தடுப்பூசி முறையால் தவிர்க்கப்படுகிறது.


குறிப்பிட்ட வகைக்கு மாத்திரம்

ஒரு வகை தடுப்பூசி எந்த நோயுக்காக டோஸ் போடப்படுகிறதோ அதே வகையைச் சேர்ந்த மற்ற கிருமிகளால் ஏற்படும் நோயை தடுக்காது.

உதாரணம்:

1.            மஞ்சள் காமாலை 'பி' தடுப்பூசி போட்டால் மஞ்சள் காமாலை 'பி' யை மட்டும் தடுக்கும். மஞ்சள் காமாலை ஏ, சி, டி, ஈ போன்றவற்றை தடுக்காது. தற்போது மஞ்சள் காமாலை 'ஏ'க்கு தடுப்பூசி உள்ளது.

2.            Hibஎனும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி, Haemophilusஎனும் கிருமியால் ஏற்படும் மூளைக் காய்ச்சல், நிமோனியாவை மட்டுமே குணப்படுத்தும். மற்ற கிருமிகளால் ஏற்படும் மூளைக் காய்ச்சல் நிமோனியாவை குணப்படுத்தாது.

3.            தட்டம்மை (Measles) தடுப்பூசி தட்டம்மையை மட்டுமே தடுக்கும். சின்னம்மையை தடுக்காது.

தடுப்பூசி நூறு சதவீதம் பாதுகாப்பானதா?

எந்த தடுப்பூசிக்கும், அந்த குறிப்பிட்ட நோய்க்கு எதிராக 100சதவீத தடுக்கும் ஆற்றல் உண்டு என்ற உத்திரவாதம் வழங்க முடியாது. தடுப்பூசி போடுவதால், குறிப்பிட்ட நோய் வரும்வாய்ப்பு குறையும்.

தடுப்பூசி போட்ட குழந்தையை குறிப்பிட்டநோய் தாக்கினால், அந்த நோயின் வீரியமும், நோயின் கால அளவும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் (தடுப்பூசி போடாத குழந்தைகளோடு ஒப்பிடும் போது) கண்டிப்பாக குறையும்.

சமூக பாதுகாப்பு

ஒரு சில குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து கொடுப்பதால், மற்ற குழந்தைகளுக்கும் அது பாதுகாப்பு அளிப்பதோடு, சமூக பாதுகாப்பையும் அளிக்கிறது. இதன் அடிப்படைதான் Pulse PolisImmunizationவருடா வருடம் 2முறை 5வயதிற்கு உட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் அரசால் கொடுக்கப்படுகிறது.

பின் விளைவு?

D.P.T., D.T.போட்ட குழந்தைகளுக்கு, இரண்டு நாட்களுக்கு ஜுரம், உடம்பு வலி ஏற்படுவது இயற்கையே. இதற்கு சாதாரண பாராசட்டமால் மருந்து போதுமானது. சில சமயம் ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்படுவது உண்டு. தட்டம்மை, MMRஊசி போட்ட குழந்தைகளுக்கு 4-5நாள் கழித்து வரை ஜுரம் வரலாம். B.C.G. போட்ட குழந்தைகளுக்கு 6வாரம் கழித்து சிறு தழும்பு வருவது நார்மல்தான்.


கவனம் தேவை

கீழ்கண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முன் மருத்துவரிடம் விவரத்தை சொல்லி விடவும். இல்லாவிட்டால் தடுப்பூசியே, நோயை உருவாக்கி விடலாம்.

1.            Steroidமருந்து ஏதாவது காரணத்திற்காக தொடர்ச்சியாக சாப்பிடும் குழந்தை

2.            இரத்த புற்று நோய் உள்ள குழந்தை

3.            எய்ட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை

4.            சில கேன்சர்களுக்கு மாத்திரை எடுத்து வரும் குழந்தை

5.            கருவுற்ற பெண்கள்

6.            தட்டம்மை வந்த குழந்தைகள் 4-5வாரம் வரை சில தடுப்பூசிகளை தவிர்ப்பது அவசியம். சென்ற முறை DPTபோட்டு அளவுக்கு அதிகமாக அழுத குழந்தை, நரம்பு மண்டல தொடர் பாதிப்பு உள்ள இக்குழந்தைகளுக்கு DPTக்கு பதில் DTஊசியே போட வேண்டும்.

7.            கருவுற்ற பெண்ணுக்கும், கருவுற சில நாட்களுக்கு முன்னும் ரூபெல்லா ஊசி போட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.


தடுப்பூசியைத் தவிர்க்க காரணம் சொல்லாதீர்

தாய்மார்கள் தடுப்பூசிகள் போடாததற்கு, தடுப்பூசி அட்டை தொலைந்து விட்டது. விசேஷத்திற்கு சென்று விட்டேன். மறந்து விட்டேன் என்று காரணம்  சொல்லாதீர்கள். அவ்வாறு சொல்வது தடுப்பூசி போட தவறிய குழந்தைகளின் நலனில் அந்த தாய்மார்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்றே அர்த்தம். கடும் மழையில் குடை இல்லாமல் நனைந்து கொண்டு செல்வதற்கு சமம். லேசான காய்ச்சல், சளியின் காரணமாக தடுப்பூசியை தள்ளிப் போட வேண்டிய அவசியம் இல்லை.

கூட்டுத் தடுப்பூசி

தற்சமயம் 2அல்லது மூன்று தடுப்பூசி சேர்ந்து கூட்டு தடுப்பூசி முறை வந்ததால், பெற்றோர்களின் அடிக்கடியான டாக்டர் சந்திப்பு குறைகிறது.

உதாரணம்:

D.P.T.(டிப்திரீயா, கக்குவான், டெட்டனஸ்)

மஞ்சள் காமாலை +D.P.T.சேர்ந்தது

H.B.மூளைக் காய்ச்சல் +D.P.T. சேர்ந்தது

மஞ்சள் காமாலை B+D.P.T. +H.B               .சேர்ந்தது

M.M.R. (தட்டம்மை, பொட்டாலம்பை, ரூபெல்லா)

மஞ்சள் காமாலை A+மஞ்சள் காமாலைB சேர்ந்தது.


குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை

வயது                                தடுப்பூசி  
பிறந்த உடன்                  பி.ஸி.ஜி., போலியோ சொட்டு மருந்து,         
                                            மஞ்சள் காமாலை 'பி' தடுப்பூசி                            
45நாள்                              முத்தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து
1 ½ மாதம்                       மஞ்சள் காமாலை 'பி' தடுப்பூசி    
2 ½ மாதம்                       முத்தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து,
                                             மஞ்சள் காமாலை 'பி' தடுப்பூசி
3 ½ மாதம்                       முத்தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து
4 ½ மாதம்                       போலியோ சொட்டு மருந்து
9மாதம் முடிவில்         தட்டம்மை தடுப்பூசி
15மாதம்
1 ¼ வயது                        எம்.எம்.ஆர். தடுப்பூசி
1 ½ வயது                       முத்தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து
2வயது                            டைபாய்டு தடுப்பூசி
4-5வயது                        போலியோ சொட்டு மருந்து, முத்தடுப்பூசி
8வயது சிறுமி              ரூபெல்லா தடுப்பூசி
10வயது                           டி.டி.


புதிய தடுப்பூசி பற்றி...

1.            மூளைக் காய்ச்சல் HIBதடுப்பூசி
               அ. பிறந்தது முதல் 6மாதம் வரை
               3தடுப்பூசி போட வேண்டும். 4வது ஊசி 1 ½ வயதில் 
               ஆ. 6மாதம் முதல் 1வயது வரை
2              தடுப்பூசி போட வேண்டும். 3வது ஊசி 1 ½ வயதில்
 
2.            போலியோஇன்ஜக்ஷன் (இளம்பிள்ளை வாத ஊசி):


போலியோ தடுப்பூசி:-

போலியோ நிரந்தர பலவீனம் அல்லது பக்கவாதத்தால்  கால்கள், கைகள் அல்லது இவை இரண்டுமே செயலிழந்து போவதற்கு வழி செய்து விடும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மிகக் கொடிய நோயான போலியோ மையிலிடீஸ் நோயிலிருந்து இத்தடுப்பூசி பாதுகாக்கிறது. போலியோ நிரந்த ஊனம் மற்றும் மரணத்திற்கும் கூட வழி வகுத்து விடும். போலியோ நோய் இப்போது நிலவும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இரண்டு வகையான தடுப்பூசிகள்:

ஓரல் போலியோ வேக்ஸின் (ஓபிவி) மற்றும் இன் ஆக்டிவேடட் போலியோ வேக்ஸின் (IVP),இது இன்ஜெக்ஷனாகக் கிடைக்கிறது.

போலியோ சொட்டு மருந்து மூலம் இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ கிட்டதட்ட ஒழிக்கப்பட்ட இக்காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ ஊசி (injection Polio) போடுவது நல்லது.
மூன்று தடுப்பூசி பிறந்த 6வது 10வது 14வது வாரங்களில் போட்டு விட்டு 4வது ஊக்குவிப்பு டோஸ்(Booster Dose) குறைந்தது 6மாதம் கழித்து போட வேண்டும். அல்லது வழக்கமான முத்தடுப்பு (DPT) தடுப்பூசியுடன் சேர்ந்து 6வது 10வது 14வது வாரம் மற்றும் 18வது மாதம் போடலாம்.


ரோட்டா வைரஸ் (Rota Virus) தடுப்பு சொட்டு மருந்து:

ஓரல் ரோட்டா வைரஸ் தடுப்பூசி:


ரோட்டா வைரஸிலிருந்து இத்தடுப்பூசி பாதுகாக்கிறது. சிசுக்களுக்கு கடுமையான வயிற்றுப் போக்கு மற்றும் டீஹைட்ரேஷன் ஏற்படுத்தும் முக்கிய மூல காரணம் இவ்வைரஸாகும்.

இந்நோயின் விளைவால் இந்தியாவில் ஆண்டுதோறும் 5இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றும் 15லட்சம் வரை குழந்தைகள் மரணமடைகின்றார்கள்.

இந்நோய் ஏற்பட்டால் அதனுடன் வாந்தி, மிக அதிக அளவில் தண்ணீர் போன்று வயிற்றுப் போக்கு( நாளுக்கு 10தடவைகள் வரை) 3முதல் 8நாட்களுக்கு நீடிக்கிறது.

சுத்தம், சுகாதாரமாக இருந்த போதிலும் ரோட்டா வைரஸ் தொற்று நோய் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.  ஏனென்றால் 5வயதுக்குள் ஏறக்குறைய ஒவ்வொரு குழந்தையும் ரோட்டா வைரஸ் நோயால் தாக்கப்படுகின்றனர்.

இது ரோட்டா வைரஸினால் ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடுக்க 2னுழளந 1மாத இடைவெளியில் போட வேண்டும். 2Doseயையுமே பிறந்து 7முதல் 8மாதத்திற்குள் போட்டு முடிக்க வேண்டும். பிறந்து 6வது வாரம் முதல் போட வேண்டும்.


நிமோகோக்கல் (Pneumo Coccal) தடுப்பூசி:

நிமோனியா மற்றும் மெனின்ஜிடிஸ் ஆகியவற்றிலிருந்து இத்தடுப்பூசி பாதுகாக்கிறது. இந்நோய் ஏற்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடுவதோடு ஸ்ட்ரெப்டோகாக்கல் நிமோனியாவின் ஒரு வித பாதிப்பால் மரணமும் சம்பவிக்கிறது. சிறு பிள்ளைகள் (5வயதுக்கும் குறைவான வயதுள்ளவர்கள்) இந்நோய்க்கு இலக்காகின்றனர்.

நியுமோ காக்கல் என்னும் கிருமியினால் மூளைக் காய்ச்சல், நிமோனியா, இரத்தத்தில் நோய் தொற்று, நடுக்காதில் நோய் தொற்று, போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இதைத்; தடுக்க, இத்தடுப்பூசியை பிறந்து 6வாரம் முதல் 9வயது வரை தடுப்பூசி போடலாம். முதல் Doseஐ, பிறந்து 6வாரம் முதல் 2மாதம் வரை போடலாம்.

இதே போல் 1முதல் 2மாத இடைவெளியில் 3Doseபோடலாம். 4வது ஊக்குவிப்பு (Booster Dose) 1வயது முதல் 1 ½ வயது வரை போடலாம். 3வது டோஸுக்கும் 4வது டோஸுக்கும் குறைந்தபட்சம் 2மாதம் இடைவெளி விட வேண்டும்.

நியுமோ காக்கல் தடுப்பூசியே போடப்படாத, ஏழு மாதத்தைத் தாண்டிய குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவாறு தடுப்பூசி போட வேண்டும்.

வயது (முதல் டோஸ்)                                    மொத்த டோஸ்கள்
7-11மாதக் குழந்தை                                              3டோஸ், 1வது, 2வது டோஸ்கள்
                                                                                        4வார இடைவெளி, 3வது டோஸ்
                                                                                        1வயதில் அல்லது 2மாதம் கழித்து
12-23மாதக் குழந்தை                                            2டோஸ்கள், 2மாத இடைவெளி
24மாதம் மற்றும் அதற்கு மேல்                      ஒரு டோஸ் மட்டும்

 
நியுமோ காக்கல் தடுப்பூசி கீழ்க்கண்டவர்களுக்கு போடுவது நல்லது

1.            இருதய நோயாளிகளுக்கு
2.            நாள்பட்ட நுரையீரல் நோய்களுக்கு
3.            கல்லீரல் நோய்களுக்கு
4.            மண்ணீரல் வேலை குறைபாடு உள்ளவர்களுக்கு
5.            மண்ணீரல் நீக்கப்பட்டவர்களுக்கு
6.            எய்ட்ஸ் நோயாளிகளுக்கு
7.            இரத்தப் புற்று நோய் உள்ளவர்களுக்கு
8.            சிறுநீரக நோயாளிகளுக்கு
9.            புற்று நோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு
10.          உடல் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு
11.          எலும்பு மஞ்ஞை மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு இன்னும் பலருக்கு.


ஸெர்வைகல் கேன்ஸர் தடுப்பூசி

ஸெர்வைகல் கேன்ஸர் நோய் ஏற்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது. இது இந்திய பெண்மணிகளுக்கு மிகப் பொதுவாக ஏற்படக் கூடிய புற்று நோயாகும். மார்பக புற்று நோயை விட மிகப்பொதுவாக ஏற்படக் கூடியதாகும்.

ஆண்டுதோறும் இந்தியாவில் 74000பெண்களுக்கு ஸெர்வைகல் கேன்ஸர் நோயால் மரணம் சம்பவிக்கின்றது. இந்த புதிய HPVதடுப்பூசியை 10வயதுக்குப் பிறகு 3டோஸ்களாக கொடுக்கலாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு தொடர்ந்து பரிசோதித்துக் கொள்வதே ஸெர்வைகல் கேன்ஸரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த உபயமாகும்.
ஸெர்வைகல் கேன்ஸர் ஏற்படுவதற்கு வெகு முன்னரே வேக்ஸினேஷன் மூலம் இப்போது ஸெர்வைகல் கேன்ஸரை தடுக்க முடியும்.

இத்தடுப்பூசியானது உடலை வைரஸை எதிர்த்து போராடும் விதத்தில் ஆன்டிபயடீஸை விருத்தி செய்யக் கூடியதாக்குகிறது. இந்த ஆன்டிபாடீஸ், HPVதொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. தடுப்பூசி கர்பப்பை வாய் புற்று நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


ஸெர்வைகல் கேன்ஸர் வேக்ஸினை யார் போட்டுக் கொள்ள வேண்டும்?

இளம் வயது பெண்களுக்கு கூடுமானவரை ஆரம்பத்திலேயே வேக்ஸின் (தடுப்பூசி) போடுவது மிகவும் நல்லதாகும். ஏனென்றால் இந்த சமயத்தில்தான்  நோய் எதிர்ப்பு சக்தி வேக்ஸினை ஏற்றுக் கொள்வது சாத்தியப்படுகிறது. இருந்த போதிலும் எல்லா பெண்களுமே ஸெர்வைகல் கேன்ஸரால் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தில் இருப்பதால் அவர்களுக்கும் இந்த வேக்ஸினேஷன் பொருந்தும்.

ஸெர்வைகல் கேன்ஸர் வேக்ஸின் எவ்வாறு தரப்படவேண்டும்? அது பாதுகாப்பானதா?

10வயது முதல் 45வயது வரையிலான பெண்களுக்கு போடலாம். 6மாத காலகட்டத்தில் 3டோஸ் இன்ஜக்ஷன்கள் வீதத்தில் வேக்ஸின் தரப்பட வேண்டும்.

இந்த வேக்ஸின் பாதுகாப்பானது மற்றும் நன்கு தாங்கிக் கொள்ளக் கூடியதாகும். மற்ற இதர வேக்ஸினை போட்டுக் கொள்ளும் போது ஏற்படுவதைப்போன்று லேசான காய்ச்சல் அல்லது வீக்கம் போன்ற மிதமான எதிர் விளைவுகள் இந்த வேக்ஸினேஷனை போட்டுக் கொண்ட பிறகு ஏற்படக் கூடும்.


FLU Vaccine(ஃபுளு)

இன்புளுயன்ஸா (ஃப்ளு) தடுப்பூசி:


இன்புளுயன்ஸா வைரஸால் ஏற்படும் மூச்சுக் குழாய் சுகவீன தொற்று நோய் ஏற்படாமல் இது பாதுகாக்கிறது. இது மிதமானதுமுதல் கடுமையான உடல் சுகவீனம் ஏற்பட வழிசெய்வதோடு, மரணம் சம்பவிக்கவும் வழி செய்கிறது.
இந்த தடுப்பூசி influenzaஎன்னும் வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இதய நோய் உள்ள குழந்தைகளுக்கு போடுவது நல்லது.

ஒவ்வொரு வருடம் Flu Seasonளுநயளழn க்கு முன்னால் போடலாம். பிறந்து 6மாத முதல் இதை போடலாம். முதல் வருடம் மட்டும் 2டோஸ்கள் போட்டு விட்டு அதற்கு பிறகு வருடம் வருடம் ஒரே ஒரு டோஸ் போடலாம்.
9வயதுக்கு மேல் முதல் வருடம் ஒரு டோஸ்போதுமானது. நியுமோ காக்கல் தடுப்பூசி எந்த மாதிரி நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் இதை போடலாம்.


காலரா தடுப்பூசி சொட்டு மருந்து:-

இது காலரா நோயை தடுக்க ஒரு வயதுக்கு பிறகு 2டோஸ்கள், 14நாள்கள்  இடைவெளியில் சொட்டு மருந்தாக வாய் வழியாக கொடுக்கலாம். இதற்கு முன் காலரா தடுப்பூசி, ஊசி மூலம் போடப்பட்டது. அதற்குப் பின் விளைவும் அதிகம். நோய் தடுப்பும் குறைவு. ஆனால் காலரா சொட்டு மருந்துக்கு, பின்விளைவு குறைவு. ஆனால் நோய் தடுப்பு ஆற்றல் அதிகம்.

மஞ்சள் காமாலை 'ஏ' தடுப்பூசி:

தொற்றிக் கொள்ளக் கூடிய கல்லீரல் நோயிலிருந்து இது பாதுகாக்கிறது. இந்நோயால் ஹெப்பாடீடிஸ் வைரஸோடு தொற்று நோய் உண்டாகிறது. ஹெப்பாடீடிஸ் ஏ முக்கியமாக அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலமாக பரவுகிறது.

இந்தியாவில் ஹெப்பாடீடிஸ் ஏ என்பது கல்லீரல் தொற்று நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாகும். இதன் விளைவால் மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது. மஞ்சள் காமாலையோடு வாந்தி, பசியின்மை மற்றும் அடிவயிற்றில் வலி போன்ற இதர அறிகுறிகளும் ஏற்படும்.

இந்நோய் அநேகமாக 4வார காலம் வரை நீடிக்கக் கூடும். குழந்தைகளுக்கு இந்த நோய் கண்டால் அதன் கல்லீரல் செயலிழந்து விடும் நிலைக்கு மாறி அதன் விளைவால் மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடுவதோடு மரணமும் கூட சம்பவிக்கும்.

ஹெப்பாடீடிஸ் ஏ மற்றும் பி ஆகிய இரண்டுமே வைரஸ் ஹெப்பாடீடிஸின் வகைகளாகும். இது வேறுவேறு வைரஸ்களால் உண்டாகிறது. ஹெப்பாடீடிஸ் பி போட்டுக் கொண்டால் ஹெப்பாடீடிஸ் ஏ யிலிருந்தோ அல்லது ஹெப்பாடீடிஸ் ஏ போட்டுக் கொண்டால் ஹெப்பாடீடிஸ் ‘பி’யிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது.
இந்த தடுப்பூசி 2தவணையாக 6மாதம் இடைவெளியில் 1வயதுக்கு பிறகு போட வேண்டும். இந்த தடுப்பூசி HepatitisAயிலிருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கும்.


சின்னம்மை தடுப்பூசி: (Chicken Pox)

வேரிஸெல்லர் ஜோஸ்டர் வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாக்கி ஏற்படும் நோயிலிருந்து இது பாதுகாக்கிறது. உடல் முழுவதும், அதிலும் மிக அதிகமாக முகம் உச்சந்தலை மற்றும் கைகளின் சருமங்களில் சினைப்போடு கொப்பளங்கள் (250-500) ஏற்படுகின்றன.

இந்த வைரஸால், நிமோனியா அல்லது மூளையில் தொற்று நோய் உண்டாகிறது. இவ்வகையாக கோளாறுகள் ஏற்படுவது வெகு அபூர்வம் என்ற போதிலும், அவை ஆபத்தானவைகளாகும்.

ஏறக்குறைய எல்லாருமே தங்கள் வாழ்க்கையில் இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். சின்னம்மை மற்றும் ஹெர்பஸின் பாதிப்பிலிருந்து தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்ல பயனுள்ள வழியாகும்.

இது சின்னம்மையில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி 1வயதுக்கு மேல் 1டோஸ் போட வேண்டும். பத்து வயதுக்கு மேல் 2டோஸ்கள் 1மாதம் இடைவெளியில் போட வேண்டும்.

ஏற்கனவே சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி போட வேண்டியது இல்லை. ஏனென்றால் சின்னம்மை ஒரு முறை வந்தால், வாழ்நாள் முழுவதும் திரும்ப வராது. தற்போதைய ஆய்வின்படி 15மாதம் முதல் இதை போடுவது நல்லது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Rabies(நாய்கடி தடுப்பூசி)

இது வழக்கமான தடுப்பூசிபோல் போடாவிட்டாலும், நாய் போன்ற விலங்குகளுடன் அதிக தொடர்புடையவர்கள், Pre Exposure(நாய்கடிக்கு முன்) ஆக 0; 3;7வது நாள்களில் 3டோஸ் போட வேண்டும்.

Rabiesசந்தேகமுள்ள நாயால் கடிக்கப்பட்டவர்கள் நாய் கடித்து 0, 3, 7, 14, 28நாள்களில் ஊசி போட வேண்டும். நாய் மீது சந்தேகம் இருந்தால் 0, 3, 7வது நாள் ஊசி போட்டு விட்டு, நாய் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் அத்துடன் ஊசியை நிறுத்திக் கொள்ளலாம்.

உடலில் நாய் கடியால் ஏற்படும் அதிககாயம், முகத்தில் நாய் கடி போன்றவற்றிற்கு Rabiesதடுப்பூசியுடன் Anti Rabiesஇம்முனோ குளோபுளின் (Immuno Globulin) போடுவது நல்லது.


இன்னும் பல புதிய தடுப்பூசிகள்:

Japanese B Encephalitis (தடுப்பூசி):

JBமூளைக் காய்ச்சலில் இருந்து பாதுகாக்க, இந்த நோய் அதிகம் உள்ள ஏரியாக்களில் மட்டும் இதைப் போடலாம்.

Meningo Coccal(தடுப்பூசி):

Meningo Coccal கிருமியில் இருந்து பாதுகாக்க, பாதிக்கப்பட்ட ஏரியாவில் உள்ளவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட  ஏரியாக்களுக்கு  பயணம் செய்பவர்களுக்கும், ஹஜ் யாத்திரிகர்களுக்கும் இது கொடுக்கப்படுகிறது. 2வயதிற்கு மேல் கொடுக்கலாம்.

Yellow Fever(தடுப்பூசி):

இது Yellow Fever எனும் நோய் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு மட்டும், 2வயதிற்கு மேல் ஒரே ஒரு டோஸ் ஆக போடப்படுகிறது. இது 10வருடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். Yellow Feverவேறு, மஞ்சள் காமாலை வேறு.                   ( 23-11-2012 )