ரயிலில் முன்பதிவு பெட்டியில் செல்லும் அனைவரும் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. சமீபத்தில் ஏ.சி.பெட்டிகளில் பயணம் செல்பவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அனைத்து முன்பதிவு பயணத்திற்கும் இப்போது அடையாள அட்டை அவசியம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்றுமுதல் (சனிக்கிழமை) அமலுக்கு வருகிறது.
ஏதாவது ஒரு அடையாள அட்டை அவசியம்
சட்டவிரோதமாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் இன்றுமுதல் அனைத்து முன்பதிவு (தட்கல் மற்றும் பொது) பயணத்திற்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
எனவே, முன்பதிவு டிக்கெட் எடுத்துள்ள அனைத்து பயணிகளும் கீழ்க்கண்ட புகைப்படத்துடன்கூடிய அசல் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும்.
1. வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு,
2. டிரைவிங் லைசென்ஸ்,
3. மத்திய, மாநில அரசுகள் வரிசை எண்ணுடன் வழங்கிய அடையாள அட்டை,
4. வங்கிக் கடன்அட்டை,
5. வாக்காளர் அடையாள அட்டை,
6. வங்கி பாஸ் புத்தகம்,
7. பாஸ்போர்ட்,
8. அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை,
9. ஆதார் அடையாள அட்டை,
10. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்ட, நகர, பஞ்சாயத்து நிர்வாகம் வரிசை எண்ணுடன் வழங்கும் அடையாள அட்டை.
இந்த அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை ரெயில் பயணத்தின்போது அவசியம் வைத்திருக்க வேண்டும். நகல் அடையாள அட்டை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
காயல் பயணிகளின் நலனுக்காக இச்செய்தி வெளியிடப்படுகிறது.