முகலாய மாமன்னர் அவ்ரங்கஸீப் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் ஆட்சிகாலத்தில் வங்கதேசப் பகுதிக்கு ஆளுநர் பொறுப்பை (கவர்னர்) ஏற்குமாறு காயலில் தோன்றிய இறைநேசச் செல்வர் மகான் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.
இருப்பினும் அப்பொறுப்பினை ஏற்க மறுத்த அவர்கள், வள்ளல் சீதக்காதியை பரிந்துரை செய்ய, அவர்களும் வங்கதேச அரசுப் பொறுப்பை சில காலம் வழி நடத்தினார்கள்.
எனவேதான், மூதறிஞர் ராஜாஜி அவர்கள் வங்கதேச கவர்னராக பொறுப்பேற்கும் போது நான் தமிழகத்திலிருந்து பொறுப்பேற்கும் இரண்டாவது ஆளுநர் எனக் குறிப்பிட்டார். இது வரலாறு.
சிறப்புக்குரிய சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களை, சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் அவர்கள் சந்தித்து பெருமானார் பற்றிய தகவல்களை கேட்டபோது, தானும் வழங்கி, தனது மகனிடத்திலும் கேட்டுப் பெறுமாறு பணித்தார்கள். மகன் தந்த தகவலையும் பெற்றுக் கொண்டதனால் முழுமை பெற்றது சீறாப் புராணம். இதுவும் வரலாறு.
போற்றுதலுக்குரிய சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் அந்த மகன்தான் முஹம்மது லெப்பை அப்பா அவர்கள் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) .
இன்றைய அரபி மத்ரஸாக்களில் இலக்கண வகுப்பில் இடம் பெற்றுள்ள நூலைத் தொகுத்த பெருமையும் இவர்களுக்கு உண்டு.
அன்னாரின் 304வது நினைவுநாள், (கந்தூரி)அவர்கள் நல்லடக்கமாகியுள்ள, பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
ஹிஜ்ரி 1434ம் ஆண்டு முஹர்ரம் பிறை 6 (21-11-2012) புதன்கிழமை இடம் பெற்ற இந்நிகழ்ச்சியில் மௌலிது, திக்ரு, சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. இவைகளை காயலர்கள் முன்னின்று நடத்தினர்.
மேலும், காதர் அவுலியா பள்ளிவாசல் நிர்வாகிகள் அனைத்து மத பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற சமூகநல்லிணக்க விழாவை சிறப்பாக நடத்தினர்.
தகவல்:
எம்.யு. அமானுல்லாஹ்.