மற்றும் ஒரு மருத்துவ முகாம்
அண்மையில் டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சலுக்கான இலவச முன்தடுப்பு மருந்து வழங்கும் முகாம் அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தில் நடைபெற்றது. பலர் பயனடைந்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது காயலின் கீழைப் பகுதியான இளைஞர் ஐக்கிய முன்னணி மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் இணைந்து மற்றும் ஒரு முன்தடுப்பு மருந்து வழங்கும் முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
24, 25-12-2012 ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை பெரிய முத்துவாப்பா தைக்கா தர்ஹா வளாகத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது. ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இம்முகாமில் பயன் பெறலாம். டாக்டர் எஸ்.எம்.என். செய்யிது முஹ்யித்தீன் டி.எஸ்.எம். மருத்துவராக பணியாற்றுகிறார். மன்னர் ஜுவல்லர்ஸ் மற்றும் அல்தாஃப் என்டர்பிரைஸஸ் ஆகிய நிறுவனங்கள் முன்பதிவிற்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நிலவேம்பு குடிநீர் வழங்குவதன் மூலம் டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சல் தடுப்புக்கு வழிவகுக்கும் இம்முகாம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
தகவல்: இளைஞர் ஐக்கிய முன்னணி மற்றும் காக்கும் கரங்கள் பிரசுரம்.
மறைந்த மார்க்க அறிஞருக்கு கத்தர் காயல்நலமன்றம் இரங்கல்
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்கள் அண்மையில் காலம் சென்றதையொட்டி, கத்தர் காயல்நலமன்றத்தின் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
நாடறிந்த நாவலரும், தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களுள் ஒருவரும், காயல்பட்டினத்தில் பன்னூற்றுக் கணக்கான மார்க்க அறிஞர்கள் உருவாகக் காரணமானவரும், காயல்பட்டினத்தில் கலை – இலக்கிய ஆர்வலர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரும், எமது கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் நூருத்தீன் அவர்களின் தந்தையும், உறுப்பினர் ஜெய்லானீ அவர்களின் மாமாவும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் கண்ணியத்திற்குரிய முதல்வருமான மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ அவர்கள் இன்று நள்ளிரவில் வஃபாத்தான செய்தியறிந்து மிகவும் கவலையுற்றோம்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொருத்தருளி, அன்னாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனபதியை நற்கூலியாக வழங்கியருள்வானாக…
அன்னாரின் மறைவு நம் சமுதாயத்திற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் எங்கள் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினருக்கும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எமது கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்கள் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள துஆ இறைஞ்சுகிறோம்.
இவ்வாறு கத்தர் காயல் நல மன்ற செய்தித் தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்: கவிமகன் காதர்
மகளிர் கல்லூரியின் நிகழ்ச்சிகள்:
கணிதவியல்துறை மன்றக்கூட்டம்
காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல்துறையின் சிறப்பு மன்றக் கூட்டம் 18.12.2012 அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர். திருமதி. வே. சசிகலா, M.A., M.Phil., Ph.D., தலைமை தாங்கினார்.
மாணவி H. ஜவாஹிரா வரவேற்புரை ஆற்றினார். கணிதவியல் துறைத்தலைவி G. அமுதா, M.Sc., M.Phil., அறிமுகஉரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்சிக்கு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கணிதவியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் திருமதி. R.கலா, M.Sc., M.Phil., Ph.D., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்ட முடிவில் மாணவி அஹமது, ஹிதுரு பாத்திமா நன்றியுரை கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் திருமதி. S. இராஜலெட்சுமி சிறப்பாகச் செய்திருந்தார்.
இளைஞர் செஞ்சிலுவை சங்கக் கூட்டம்
இக்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் டாக்டர். திருமதி வே. சகிகலா, M.A., M.Phil., Ph.D., அவர்கள் தலைமை தாங்கினார்.
இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் மாணவ தலைவி செல்வி. ருமிசா பெர்னான்டோ வரவேற்றுப் பேசினார். அக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர். திரு. வசீகரன் அவர்கள் முதலுதவி, விழிப்புணர்வு குறித்தும, இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மக்கள் தொடர்பாளர் திரு. V. சுப்பிரமணியன் அவர்கள் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பு பற்றியும், இரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஐ. மாலினி, M.Com., M.Phil., ச. பர்வத காந்தம், M.B.A., ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். இக்கூட்டத்தில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: கல்லூரி நிர்வாகம்