பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த மத்திய சர்க்கார் முயற்சிப்பதைக் கண்டித்து காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் சார்பில் 28-10- 2016 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ விற்கு பின்னர், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காயல் S.E.அமானுல்லாஹ் ஆற்றிய அறிமுக உரை.
வல்லமை சால் இறைவா! வழுத்தும் புகழ் அனைத்தும் வல்லோன் உன் தனக்கே. அல்ஹம்துலில்லாஹ்.
துறை தோறும், துறை தோறும் முறையான வாழ்வமைய நிறைவான வழியீந்த இறைத்தூதர், எங்கள் உயிர் நிகர்த்த , எங்கள் உயிர் மிகைத்த உத்தம நபிகளார் (ஸல்) அவர்கள் மீதும் , அவர்களின் அடிச்சுவட்டில் தடம் பதித்தோர் அனைவர் மீதும் வல்லோன் அருள் வான்மழையாய் பொழியுமாக.
மாண்பமை மார்க்க அறிஞர்களே! காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் அங்கங்களே! மதிப்புயர் காயல் பதியின் சொந்தங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் .
நம் அன்னை இந்தியாவில் வாழ்கின்ற நமது உரிமைக்கு எதிரான யுத்தக் களத்தில், முனைப்புடன் போராடி நம்மை தற்காத்து கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு நாம் இன்று ஆளாகி உள்ளோம்.
சதிகாரர்களின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறியும் நடவடிக்கைகளை, நாடெங்கும் நம்மவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
அதனடிப்படையில் வளமார் காயலில் நம் உரிமை காக்க நாமெல்லாம் இன்றைய பிற்பகலில் வெள்ளமெனத் திரண்டுள்ளோம்.
வல்ல இறைவன், வள்ளல் நபிகளார் மூலம் நமக்களித்த வாழ்க்கை நெறிமுறைகளை, சட்டங்களை, குறைமதியாளர்கள் இன்றைக்கு தங்கள் அரைகுறை அறிவால் ஆராயத் துவங்கியுள்ளனர்.
இந்திய நாட்டின் அரசமைப்பு சட்டம் நமக்கு வழங்கியுள்ள தனியார் உரிமை இயல் சட்டத்திற்கு எதிராக, மத்திய அரசு தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதை அழுத்தமாக எதிர்க்கின்ற முகமாகத்தான் நாம் இங்கு குழுமியுள்ளோம்.
மேற்கு வங்கத்தில், உத்தரகாண்டில், ராஜஸ்தானில் வாழுகின்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள் வெவ்வேறு காலக் கட்டங்களில் தங்களது கணவர்களால் விவாகரத்துச் செய்யப்பட, அவர்கள் தங்களது மாநில நீதிமன்றங்களில் தங்களுக்கு நியாயம் கோரி வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கின் இறுதியில், அவர்களுக்கு கணவர்களால் வழங்கப்பட்ட விவாகரத்து சரியானதே என தீர்ப்பு வந்த பின்னர், இம்மூவரும் உச்ச நீதி மன்றத்தை அணுகி தங்களுக்கு நீதி வழங்கிடுமாறு மேல்முறையீடு செய்தனர் .
மூன்று வழக்குகளும் ஒரே தன்மை உடையதாகவே இருந்ததால், அவற்றினை ஒரே வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம், இப்பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கும் நோக்கில், முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தில் ஷரியத் சட்டம் குறித்து கருத்து கேட்டது.
முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை சார்ந்தது எனவும், அது சரியானதே எனவும், அதற்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்க தங்களுக்கும், எவருக்கும் உரிமை இல்லை என்பன போன்ற பதிலை உச்ச நீதிமன்றத்திற்கு அவ்வாரியம் பதிலாக அனுப்பி வைத்தது.
முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தின் பதிலில் திருப்தியடையாத உச்ச நீதி மன்றம், இது குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்டது.
நீண்ட காலமாக பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்தத் துடிக்கும் சங் பரிவார் அமைப்பைச் சார்ந்தோர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் அந்த கருத்துக் கேட்பை தங்கள் கனவை நினைவாக்கும் வாய்ப்பாகக் கருதினர்.
பாலியல் சமத்துவம் இல்லாத இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவது சரியல்ல எனவும், எனவே அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதே சரியென்றும், அதற்கான கருத்துக் கேட்பினை பொதுமக்களிடம் கேட்கும் பணியை சட்ட வாரியத்தின் மூலமாக அரசு செய்யும் எனவும், உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு பதிலாகத் தெரிவித்தது.
இந்நிலையில்தான், முஸ்லீம் தனியார் சட்ட வாரியம், அரசு சட்ட வாரியத்தின் கருத்துக்கேட்பிற்கு செவி சாய்க்க வேண்டாம் எனவும், தங்களால் தயாரிக்கப்பட்டுள்ள மனுவில் மட்டும் கையெழுத்திடுமாறும் வேண்டுகோள் விடுத்தது.
அந்த வேண்டுகோளின் அடிப்படையில்தான், நாடெங்கும் முஸ்லிம்களால் கையெழுத்து இயக்கங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த வழிமுறையைப் பின்பற்றித்தான் காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை, இப்பெருநகரில் வாழக் கூடிய முஸ்லிம்களின் கையெழுத்தைப் பெறுகின்ற பணியினை நிறைவுசெய்து, இன்று ஜூம்ஆவிற்குப் பின்னர் நாம் அனைவரும் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கும் வழிவகை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் விவாகரத்து பற்றி மட்டுமே கருத்து கேட்டிருந்தபோதும், மத்திய அரசோ முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் மாற்றி, பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்க, வேகமும், முனைப்பும் காட்டுகின்றது என்பது தான் உண்மை.
அரசு சட்ட வாரியம் கேட்டுள்ள 16 கேள்விகளுக்கு நாம் எப்படி பதிலளித்தாலும், அப்பதில்கள் நமக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வாய்ப்பாக அமைகிறது.
ஆம்! அக்கேள்விகளும், அக்கேள்விகளுக்கு பதில் சொல்லக் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளும் நமக்கு எதிராகவே அமைந்துள்ளன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அரசமைப்பு சட்டத்தில் 25 ஆவது பிரிவு அடிப்படை உரிமையைப் பேசுகிறது. 44 ஆவது பிரிவு வழிகாட்டும் கொள்கையைப் பேசுகிறது.
அடிப்படை உரிமைகளின்படி நமக்கு தனியார் சட்டம் வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டும் கொள்கைகளில் ஒன்று பொது சிவில் சட்டம் கொண்டு வரலாம் என்பதாகும்.
ஆனால் வழி காட்டும் கொள்கையைக் காரணமாக வைத்து அடிப்படைச் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது என்பதை அரசியல் சட்ட வல்லுநர்கள் மிகத்தெளிவாக ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றனர்.
எனவே 44 ஆவது சட்டப்பிரிவை மட்டுமே சுட்டிக்காட்டி சிலர் கருத்து சொல்வது சிறுபிள்ளைத் தனமானது என்று தான் சொல்ல முடியும்.
அந்தக் கொள்கை வழிகாட்டும் 44 ஆவது பிரிவில் பொது சிவில் சட்டம் சம்பந்தமான பிரிவை டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்டது இஸ்லாமியர்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணிக்கும் நோக்கில் இல்லை.
விளக்கமாகச் சொல்வதென்றால், இந்திய விடுதலைக்குப் பின்னர் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய போது, கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததை மனதில் வைத்தும், மறுமணம் மறுப்பை மனதிற்கொண்டும்தான் டாக்டர் அம்பேத்கார் அவர்கள் பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற ஒரு பிரிவை கொள்கை வழிகாட்டும் பிரிவில் இனைத்தார்.
அச்சமயத்தில் தான் RSS ன் பிதாமகன் குரு கோல்வாக்கர், பொது சிவில் சட்டம் என்பது இயற்கைக்கு மாற்றமானது. அது விபரீத விளைவுகளை விதைக்கும் என்று தங்கள் சமூகத்தில் நிலவும் கொடுமைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார் என்பதையும் நினைவூட்டுகிறோம்.
தனியார் சிவில் சட்டம் என்பது இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சலுகையல்ல. பெரும்பான்மையோர் இருக்கும் மதத்திலுள்ள உட்பிரிவுகளைச் சார்ந்தோருக்கும் , இன்னும் சில மதத்தவர்களுக்கும் தனியார் சிவில் சட்டம் நடைமுறையிலுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நம் நாட்டில் சற்றேறக்குறைய 300 தனியார் உரிமையியல் சட்டங்கள் உள்ளன எனவும் இதில் மிகப் பெரும்பாலான சட்டங்கள் பெரும்பான்மை இந்துச்சமுதாயத்தின் உட்பிரிவுகளைச் சார்ந்தோருக்கு உரியவை எனவும் அறிய வருகிறோம்.
நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் நமக்காக வழங்கியிருக்கும் தனி சிவில் சட்டத்தில் திருமணம், மணவிலக்கு, சொத்துரிமை, வாரிசுரிமை, வக்ப் நிர்வாகம் வழிபாட்டு உரிமை, மதத்தின் கொள்கைகளைப் பரப்பும் உரிமை போன்றவை அடங்கும். பொது சிவில் சட்டம் அமுல்படுத்தப்படுமேயானால் இவை அனைத்திற்கும் படிப்படியாக பங்கம் விளையும்.
இந்தியா போன்ற நாட்டில் முஸ்லிம்களுக்கான தனியார் சிவில் சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல, நாகரிக சமுதாயத்திற்கு எதிரானது என்றும், முஸ்லீம் பெண்களுக்கு அநீதி விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இந்தியாவில் தலைமை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வரை விசமத்தனமான கருத்துகளைத் தூவி வருகின்றார்கள்.
கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும் என்ற கொடுமையான நடைமுறையால் மாண்டோரின் கல்லறைகளில் எழுப்பப்பட்டுள்ள சதி மாதா கோவில்களை இன்று வரை வழிபாட்டுத் தளங்களாகத் கருதுவோர்,
கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் மறுப்போர், விதவைகளுக்கு மொட்டை அடித்து அழகு பார்ப்போர், தீர்க்கவே முடியாத சிக்கலுக்கு உள்ளாகியுள்ள தம்பதியினர் உடனடியான மணவிலக்குப் பெற்று மறுவாழ்வு வாழ வகை செய்யாமல், நீதி மன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்க வைப்போர்,
முடிவுக்கு வராத பல்லாயிரக்கணக்கான மண விலக்குச் சார்ந்த வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி நிற்பதைக் கண்டு கொள்ளாதோர், அதற்கு தீர்வு சொல்லாதோர்,
தவிர்க்கவே முடியாத சூழ்நிலைகளில் எளிதில் மணவிலக்குக் கிடைக்காமல், குடும்பச்சண்டை தீவிரமடைந்து, கொலை பாதகத்தில் முடிகின்ற கொடுமையான சூழ்நிலைகளை வேடிக்கை பார்ப்போர்.
மொத்தத்தில் பெண்களைக் கொத்தடிமைகளாகக் கருதி அவர்களது உரிமைகளுக்குக் குறுக்கே நிற்போர், இவர்கள் தான் அழகிய உரிமைகளைப் பெண்களுக்கு வழங்கியிருக்கும் இஸ்லாமிய நெறிகளை ஆய்வு செய்யவும், விமர்சிக்கவும் துவங்கியுள்ளனர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை.
ஆகுமானவற்றில் இறைவனின் வெறுப்புக்குரியது மணவிலக்கு என்பதாக மணவாழ்க்கையின் மாண்பினை தனது வாய்மொழியின் மூலமும், தனது வாழ்வின் மூலமும், இம்மண்ணுலகிற்குச் சிறப்பாக எடுத்துரைத்த மன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்களின் இல்லற வாழ்க்கைக்கு சிறப்பார்ந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.
இதை இதயத்தில் தாங்கிய இச்சமுதாயம், மணவிலக்கை விரும்பி ஏற்றுக் கொள்வது இல்லை என்பதை அறிவு படைத்தோர் ஏற்று கொள்வார்கள்.
மனைவியை மணவிலக்கு செய்யும் உரிமை கணவனுக்கு மட்டுமல்ல. அவசியம் நேர்ந்தால், நிர்ப்பந்தமான சூழ்நிலையில், வேறு வழியின்றி மனைவியும் கணவனை மணவிலக்குச் செய்யும் மதிப்புயர் பாதுகாப்பினை வழங்கிய பாங்கான மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை இந்தச் சிறு மதி படைத்தோரின் சிந்தனைக்கு முன் வைக்க விரும்புகிறோம்.
சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மத குருமார்கள், அறிஞர் பெருமக்கள், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், அரசியல் சட்ட வல்லுநர்கள் இவர்கள் அனைவரும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கம், தாய்க்குலத்திற்கு வழங்கி இருக்கும் உரிமை குறித்து புகழாரம் சூட்டி மகிழ்கின்றார்கள்.
இந்திய நாடு அனைத்துச் சமுதாய மக்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடு அனைவருக்குமானது. இது ஆயிரம் பூக்கள் மலரும் நந்தவனம். பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழ்கின்ற நாடு என்பதில் தான் இந்நாட்டின் பெருமையே அடங்கியுள்ளது.
Unity in diversity என்பதற்கிணங்க, வேற்றுமையில் ஒற்றுமைக்காணும் இந்நாட்டில் uniformity ஆக நாமனைவரும் விளங்க வேண்டும் என்ற கருத்தினை விதைத்தால், இவர்கள் விபரீதத்தை அறுவடை செய்வார்கள் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்தச்சட்ட முன்வடிவை தீர்மானமாக நிறைவேற்றினாலும், எவருடைய கையெழுத்தால் அது சட்ட வடிவம் பெறுமோ, அந்தப் பொறுப்புக்குரிய மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான கருத்தினை அழுத்தமாகத் தெரிவித்துள்ளார் என்பதை நன்றியுடன் நினைவுக் கூறுகிறோம்.
125 கோடி மக்கள், 200 மொழிகள், 1800 எழுத்து வடிவமில்லாத மொழிகள் கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் சாத்தியமில்லை என்றும், இந்த வேற்றுமை இந்தியக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்ட அவர், அதனை இந்தியா கொண்டாட வேண்டுமே தவிர, இது போன்ற வேற்றுமைகளை செயற்கையாக ஒன்று படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும் நமது குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நாம் நம்முடைய அழுத்தமான கண்டனத்தை, பொது சிவில் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசிற்கு தெரிவிக்கிறோம்.
முழுமை பெற்ற இம்மார்க்கத்தின் நெறிமுறைகளை மாற்றியமைத்திட, மாற்ற முயற்சிக்க எவருக்கும் உரிமையில்லை.
எங்கள் உரிமைகளோடு உரசிப் பார்க்க எவருக்கும் தகுதியில்லை என்பதையும் உரியவர்களிடம் உரக்கச் சொல்ல விரும்புகிறோம்.
ஊனேறி உயிரேறி உதிரத்தில் தோய்ந்தேறி நிற்கும் வழிமுறைகளை எங்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் நபிகளாரின் அடிச்சுவட்டில் இறுதி மூச்சு உள்ளவரை நாங்கள் தடம் பதிப்போம்.
எந்தச் சூழ்நிலையிலும் எங்கள் இனிய மார்க்கம் எங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை எதற்காகவும், எவருக்காகவும் இழக்க மாட்டோம். எங்கள் மார்க்கத்திற்காக எதனையும் இழப்போம் என்பதனைப்பிரகடனப் படுத்துகிறோம்.
வேன்டா வினை விதைத்து விரும்பத்தகா வினை அறுக்காதீர்கள். தோற்றுப் போய் வெட்கித் தலைக் குணிவீர்கள் என்பதை மட்டும் தான் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மத்திய சர்க்காருக்கு நாங்கள் எச்சரிக்கையாகத் தெரிவிக்கின்றோம்.
1400 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை, துயரங்களை துன்பங்களைக் கடந்து தான் இந்த மார்க்கம் செழுத்தோங்கி திகழ்கிறது என்பதையும் நினைவு படுத்துகிறோம்.
எங்கள் உரிமையில் தொடர்ந்து தலையீடு நீடிக்குமானால் ஒவ்வொரு கர்பலாவிற்குப் பின்னாலும் இஸ்லாம் புத்துயிர் பெறும் என்று அல்லாமா இக்பால் உரைத்ததைப் போல, நாங்கள் இன்னும் வலுப்படுவோம் என்பதை மட்டும் நிறைவாக எடுத்துரைக்கின்றோம்,
அல்லாஹ்வின் நெறி பற்றி அருள்தூதர் வழி நடப்போம். சூழ்ந்து வரும் சோதனைகளை நம்மைச் சுய பரிசோதனை செய்து கொள்வதற்கும், நமது நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்வதற்கும், ஒற்றுமையை இன்னும் வளர்ப்பதற்கும், மென்மேலும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்துவோம்.
வல்ல இறைவனின் அருள் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவுமாக. வாய்ப்புக்கு நன்றி. அமைகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.