இந்திய சட்ட ஆணையம் கொண்டு வந்துள்ள பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவான கேள்வித்தாளை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் அரசாளும் பாரதீய ஜனதா கட்சி அரசு நாடு முழுவதிலும் பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்திய சட்ட ஆணையம் மூலம், மக்களிடம் கருத்துக் கேட்பதாகக் கூறி, கேள்வித்தாள் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்திய சட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் டாக்டர் பி.எஸ். சௌஹான் தனது சுற்றறிக்கையில் 16 கேள்விகளைத் தந்து, அவற்றுக்குரிய விடைகளை 45 நாட்களுக்குள் அனுப்ப வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்திய சட்ட ஆணையத்தின் இந்த வினாத்தாள் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவதற்கான முயற்சி என்பதைவிட, இந்திய முஸ்லிம்கள் உயிரினும் மேலாகப் போற்றிப் பின்பற்றிவரும் ஷரீஅத் சட்டத்தை ஒழிப்பதற்கான சூழ்ச்சி என்றே கருதவேண்டும்.
பொதுசிவில் சட்டப் போர்வையில் முஸ்லிம் ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான மத்திய அரசின் நோக்கும், போக்கும் கடும் கண்டனத்திற்கு உட்பட்டு வருகிறது.
முஸ்லிம்கள் மட்டுமின்றி, நீதி, நேர்மை, சகிப்புத்தன்மை, சமயப் பொறையுடைமை, சமயச் சார்பின்மை, பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தியும், பொதுநோக்கு போன்றவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாட்டு மக்கள் எல்லோரும் மத்திய அரசின் இந்தப் போக்கிற்கு மிகப்பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கச் சட்ட விவகாரங்கள் பற்றிக் கருத்துக் தெரிவிக்கவும், விளக்கம் அளிக்கவும், இந்திய முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஆகும்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மத்திய அரசின் சட்ட ஆணையத்தின் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.
“”இந்திய சட்ட ஆணையம் தயாரித்துள்ள கேள்வித்தாள் – வினா விடை முயற்சிக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பைத் தெரிவித்து அதைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது. “”இந்த விஷயத்தில் எங்கள் சமூகம் மீது மத்திய அரசு போர் தொடுத்துள்ளது”””” என்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் அறிவித்திருக்கிறது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூறிவரும் தெளிவான கருத்தை இங்கே மீண்டும் சமுதாய மக்களின் கவனத்துக்கு முன்வைக்கிறோம்.
மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் என்ன முடிவு செய்து அறிவிக்கிறதோ, அதுவே இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், முஸ்லிம் சமுதாயமும் ஏற்க வேண்டிய முடிவு ஆகும்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அறிவிக்கும் முடிவுகளுக்கு இணங்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தங்களின் அணுகுமுறையை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்திய சட்ட ஆணையம் கேள்வித்தாளை வெளியிட்டு மக்கள் கருத்தை அறிய மேற்கொண்டுள்ள முயற்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்ப்பதுடன்,
அதைப் புறக்கணிப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கடமையாகும் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறி உள்ளார்.
தகவல்: வாட்சப்