மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவி சங்கத்தின் கவுரவ செயலாளராக அரசால் நியமிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகாலமாக நமது நகர்மன்ற முன்னாள் தலைவர் A. வஹீதா அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இச்சங்கத்தின் அதிகாரபூர்வ தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் திகழ்கிறார்.
ஆண்டு தோறும் கவுரவச் செயலரால் திரட்டப்படும் நிதியுடன் மேலும் இருமடங்கு நிதியை அரசு இச்சங்கத்திற்கு வழங்கி வருகிறது. இந்நிதி முஸ்லீம் ஏழை தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பொருளாக வழங்கப்பட்டு வந்த இந்த உதவி, தற்போது காசோலை மூலம் நிதியாகவே வழங்கப்பட்டு வருகிறது.
காயல் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வாழும் முஸ்லீம் சமூக விதவைகளுக்கும், கல்வி மற்றும் மருத்துவத்திற்கு தேவையுடைய முஸ்லீம் மகளிற்கும் இந்த உதவி சென்றடைகிறது. இதில் 80 சதவீதம் தாய்மார்கள் காயலை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற சில வருடங்களாக ருபாய் 10 லட்சம் வரை தனவந்தர்களிடம் திரட்டப்பட்டதால் அரசின் நிதி ருபாய் 20 லட்சத்தையும் இணைத்து ருபாய் 30 லட்சத்திற்கான காசோலை உதவியாக வழங்கப்பட்டது.
இவ்வாண்டும் ருபாய் 10 லட்சத்தை இலக்காகக் கொண்டு நிதி திரட்டும் பணியில் கவுரவச் செயலர் இறங்கியுள்ள நிலையில் , துபையில் உள்ள காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் காயல் பிரதிநிதித்துவ அமைப்பான காயல் துபாய் நல மன்றம் ருபாய் 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி இத்திட்டத்திற்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டியுள்ளது.
காயல் துபாய் நல மன்றத்தின் தலைவர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹசன் ஹாஜி அவர்கள் , முற்குறிப்பிட்ட சங்கத்தின் கவுரவச் செயலாளர் ஹாஜ்ஜா A. வஹீதா B.Sc., அவர்களிடத்தில் இந்நிதியை வழங்கினார் .
இந்நிகழ்வின் போது மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவி சங்கத்தின் அங்கமாகிய அல்ஹாஜ் S.M. சதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா ) மற்றும் துபாய் காயல் நல மன்றத்தின் அங்கமான S.A.K. பாவா நவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரும்பணியாற்றும் நகர்மன்ற முன்னாள் தலைவரின் பணி சிறக்கவும், இது போன்ற பணிகளுக்கு ஊக்கமளிக்கின்ற வகையில் உதவி கரம் நீட்டும் துபாய் காயல் நல மன்றத்தின் சேவை சிறந்தோங்கவும் இதயமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
நிலைப்படம் மற்றும் தகவல்: லேண்ட்மார்க் அல்ஹாஜ் ராவன்னா அபுல்ஹசன்