தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுதான் முடிவடைந்தது.
இதனிடையே திமுக அமைப்புச் செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் கடந்த மாதம் 16-ந் தேதி உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு 19-ந் தேதி சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சுழற்சி முறை இல்லை
இந்த அறிவிப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
ரத்து செய்க
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசானைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடிருந்தார்.
நீதிபதி கிருபாகரன்
இம்மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரணை நடத்தினார். து, திமுக மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருபாகரன் இதற்கு முன்னதாக 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பான விவரங்களை ஒப்பிட்டு பார்த்த பின் வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக கூறியிருந்தார்.
அதிரடி தடை
இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், அதிரடியாக உள்ளாட்சித் தேர்தலையே ரத்து செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அரசாணைகள் அனைத்துக்கும் அவர் தடை விதித்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பானது அரசியல் நோக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது எனவும் சாடினார்.
=========================================================================================================================
உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அதிகாரி வசம் ஒப்படைக்க வேண்டும் – ஹைகோர்ட் உத்தரவு
தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அதிகாரி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வேட்பாளர்களுக்கு புதிய வழிமுறைகளை வகுக்க உத்தரவிட்டார். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கூடாது.
•தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
•உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
•உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்நோக்கம் கொண்டவை. எனவே, இது தொடர்பான 3 அரசாணைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
•புதிய அரசாணை வெளியிட்டு டிசம்பர் 30ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வரை உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
•அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவுற்றிருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
=========================================================================================================================
புதிய அட்டவணையை வெளியிட்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஹைகோர்ட் உத்தரவு
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பின் போது வார்டுகள் ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை; சுழற்சி முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அக்டோபர் 17, 19-ந் தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் சுழற்சி முறை இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களுடன் புதிய அட்டவணையை வெளியிட்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
====================================================================================================================
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய திமுக முன்வைத்த காரணங்கள் இதுதான்!
உள்ளாட்சி பதவிகளில் முறையான சுழற்சி முறை இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி வந்தது திமுக.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முறையான இட ஒதுக்கீடு பின்பற்றப்படாத காரணத்தால் தேர்தலையே சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய திமுக முன்வைத்த காரணங்கள்:
- உள்ளாட்சிப் பதவிகள் இட ஒதுக்கீடு விஷயத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான சுழற்சி முறை கடைபிடிக்க வேண்டும்.
- மறைமலை நகர் 20 ஆண்டாக தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியாக இருக்கிறது. அதை இந்த முறையும் மாற்றவில்லை.
- சென்னையில் 1996-ல் இருந்து மேயர் பதவி ஆண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.
- திருச்சியில் 20 ஆண்டுகளாக மேயர் பதவி பெண்களுக்குத்தான் இருக்கிறது. இப்போதும் பெண்களுக்குத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.
- தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பதவி தருவதற்காக ஆளும் கட்சி சொல்வதை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி இருக்கிறது
- மாநகராட்சி, நகராட்சி ஆகிய இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் மட்டும்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துகின்றனர்.
- பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்துகின்றனர்.
- வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர்களின் பெயர் இருக்காது. வாக்குச் சீட்டுகளை மொத்தமாக எடுத்து தங்களுக்குச் சாதகமான வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்கின்றனர்.
- இதைத் தடுக்கவே பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.
- உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற பொதுத்தேர்தல் போல வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும்.
- பிற மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.
- மாவட்ட கவுன்சில் தேர்லில் பதிவாகும் வாக்குகளை 2 இடத்தில் எண்ணும்போது முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.
- பஞ்சாயத்து, மாவட்ட கவுன்சில், நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட 5 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும்
இதுதான் திமுக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரிய காரணங்கள்.
====================================================================================================================
உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?- வழக்கறிஞர் விளக்கம்
உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பல அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்து சட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது
திமுக தொடர்ந்த இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் தொடர்பான அரசாணைகள் அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வெளியிட்ட மூன்று அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 30க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலுக்காக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து கருத்து கூறியுள்ள வழக்கறிஞர் வில்சன், செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மறுநாளே அதிகாலை 12.15 மணி நேரம் என குறிப்பிட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
எந்தெந்த வார்டுகள் யார் யாருக்கு ஒதுக்கீடு என்பதை முறையாக அறிவிக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாயத்து சட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும் என வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்: இணையங்கள்