காயல்பட்டினம் ஐக்கிய பேரவை ஹாங்காங் ஆலோசகர் கதீப் ஏ.ஜெ. மீராசாகிப் காலமானார்
காயல்பட்டினம் நெய்னார் தெரு மர்ஹும் கதீப் அப்துல் ஜலீல் ஹாஜியார் புதல்வரும், ஹாங்காங் மற்றும் பேங்காக் ஹோலி டிரேடர்ஸ் அதிபர்களில் ஒருவரும், சிறந்த சமூக சேவகருமான கதீப் ஏ.ஜெ. மீரா சாகிப் ஹாங்காங்கில் 24.09.2016 அன்று அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52.
இவருக்கு மனைவியும், கதீப் எம்.எஸ். அப்துல் ஜலீல், கதீப் எம்.எஸ். முஜம்மில் என்ற இரு புதல்வர்களும் உள்ளனர். இவருடன் மர்ஹும் கதீப் ஏ.ஜெ. செய்யது அஹமது, கதீப் ஏ.ஜெ. மொகுதூம் முஹம்மது ஆகிய சகோதரர்களும் கதீப் ஏ.ஜெ. நஹிமா என்ற சகோதரியும் உடன் பிறந்தவர்கள். இவர் தந்தையுடன் உடன் பிறந்தவர்கள் மர்ஹும் கதீப் அலவி ஹாஜியார், காயல்பட்டினம் ஐக்கிய சங்க சென்னை தலைவர் கதீப் ஸலீம் ஹாஜியார் ஆகியோராவர்.
கதீப் ஏ.ஜெ. மீராசாகிப் ஹாங்காங் இந்திய முஸ்லிம் ஜமாஅத் முன்னாள் உதவி தலைவராகவும், காயல்பட்டினம் ஐக்கிய பேரவை ஹாங்காங் ஆலோசகராகவும் பணியாற்றி யவர். ஹாங்காங் சர்வதேச அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும், ஹாங்காங் காயிதே மில்லத் பேரவையின் ஆலோசகராகவும் செயலாற்றி வந்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.,) மாநில செயலாளர் காயல் மகபூப் போன்றோருடன் தனிப்பெரும் பாசம்கொண்டு தாய்ச்சபை நலனில் அக்கறை காட்டியவர்.
அவரது செய்தியால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து மஃபிரத்திற்காக துஆ செய்தனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கருக்காக பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வெற்றிக்கு துணை நின்றவர் மர்ஹும் கதீப் ஏ.ஜெ. மீரா சாகிப்.
தாய்லாந்து காயிதே மில்லத் பேரவை தலைவர் வாவு எம்.எம்.சம்சுதீன், ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை செயலாளர் அல்ஹாபிழ் வி.எம்.டி. முஹம்மது ஹஸன், ஆகியோருடன் இணைந்து பல்வேறு பணிகளில் சமுதாய நலனுக்கும் காயல்பட்டினம் நகர முன்னேற்றத்திற்கும் ஆர்வம் கொண்டு செயல்பட்டவர் ஏ.ஜெ. மீராசாகிப்.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட சமுதாய பிரபலங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு தனது நட்பு வட்டாரத்தை விரிவு படுத்தி கொண்டவர். ஒரு அருமையான செயல்வீரரை ஹாங்காங் வாழ் காயல்வாசிகள் இழந்து தவிப்பதாகவும், ஒரு நல்ல சேவகரை இழந்து விட்டதாக கல்லூன் மஸ்ஜித் ஜமாஅத்தார் வேதனை தெரிவிப்பதாகவும், ஆற்றல் மிக்க சமுதாய பிரமுகரை இழந்துவிட்டதாக ஹாங்காங் இந்திய முஸ்லிம்கள் வருத்தமடைந்துள்ளதாகவும், ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை செயலாளர் அல்ஹாபிழ் வி.எம்.டி. ஹஸன் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ காயல்பட்டினம் ஐக்கிய சங்க சென்னை தலைவர் கதீப் ஸலீம் ஹாஜியர் மற்றும் குடும்பத்தினரை சென்னையில் சந்தித்து ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார்.
தகவல்: MANICHUDAR TAMIL DAILY