காயல்பட்டினம் KTM தெருவைச் சார்ந்த A. லெப்பை சாஹிப் அவர்கள், 22-09-2016 வியாழக்கிழமை இன்று மாலை 5.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது சுமார் 70.
அன்னார், மர்ஹூம் V.V. அப்பாஸ் அவர்களின் மகனும், மர்ஹூம் மொகுதூம் நெய்னா அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் A. ஷேகு அப்துல் காதிர், A.முஹம்மது ஃபாரூக் ஆகியோரின் சகோதரரும்,
மெ.த. என்று அழைக்கப்பட்ட மர்ஹூம் S.A.K. முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் K.T.M. ஷேக்னா லெப்பை, S.T .கோஸ் முஹம்மது , தாயிம் பள்ளி பொருளாளர் K.M. தவ்லத் ஆகியோரின் மச்சானும்,
M.S.L. கித்ர் அப்பாஸ், K.M .தாவூத், டாக்டர் D. கிஸார், K.M.அப்பாஸ், K.M. ஷபீர் அலீ, D.ஃபைஸல், K.M. ஸித்தீக், மர்ஹூம் D.சாமு ரியாஸ் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்கள்.
காலம் சென்ற A. லெப்பை சாஹிப் அவர்கள் A.L.S , A.L.S மாமா மற்றும் இப்னு அப்பாஸ் என்ற பெயர்களில் காயலில் அடையாள படுத்தப்பட்டவர் ஆவார்.
சென்னையில் பல்லாண்டுக் காலம் தனது தந்தையின் பெயரில் இயங்கிய நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில், பொதுச் சேவையில் அதிகமான ஈடுபாடு உடையவராக மிளிர்ந்தார் . நமதூரைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு அந்நாட்களில் சென்னையில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தந்த உதவியாளராக திகழ்ந்தார்
சென்னை வாழ்க்கையை நிறைவு செய்து காயலில் வாழ்ந்திருந்த காலத்திலும் அம்மாதிரி வேலை வாய்ப்பு சேவைகளை தொடர்ந்தவராகவே விளங்கினார்.
1970 தொடங்கி இணையதளங்கள் உருவாகும் காலம் வரை, முத்துச்சுடர் நற்சிந்தனை போன்ற பல இஸ்லாமிய மாத இதழ்களில் கட்டுரைகள் , கதைகள் , தகவல்கள் , சின்ன சின்ன குறிப்புகள் இவைகளை வழங்குவதில் ஆர்வம் உடையவராக இருந்தார்.
இணையதளங்கள் அரும்பிய காலத்தில் இருந்து சமீப காலம் வரை அவற்றில் கட்டுரைகள் பயனுள்ள தகவல்கள் இவைகளை தொடர்ந்து வழங்கி வந்தார் .
காயல்பட்டினம் தாயிம் பள்ளி வளாகத்தில் உள்ள சீதக்காதி நூலகம் அமைவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றினார்.
பிள்ளைப் பேறு இல்லாத அவர் ஊரில் உள்ள சின்ன சிறு குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதை கற்றுக் கொடுப்பதிலும் , ஓவிய போட்டி நடத்தி அவர்களை ஊக்கவிப்பதிலும் ஆர்வமுடன் தனது பங்களிப்பை வழங்கினார். அதிலும் கூட உருவமில்லா ஓவியங்களை மட்டுமே வரைய வேண்டும் என்பதில் கட்டுப்பாடு விதித்தார் . இயற்கை காட்சிகள் மற்றும் மலர்கள் இவைகளை மட்டுமே ஓவியமாக குழந்தைகளுக்கு வரைந்து பயிற்றுவித்தார் .
1978 ஆம் ஆண்டு நமதூரில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் , 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற அது போன்ற இன்னொரு நிகழ்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் வெற்றிக்காக உழைத்தார்.
நகைச்சுவை உணர்வோடும், இன்முகத்தோடும் எல்லோரிடமும் பழகக்கூடிய இனிய குணத்தை பெற்றவராக விளங்கிய அவரின் இழப்புச் செய்தி, அவரோடு தொடர்புடைய அனைவருக்கும் மிகுந்த வருத்தமளிக்கும் தகவலே ஆகும் .
பொதுச் சேவை தளத்திலும் , இலக்கிய வட்டாரத்திலும் வலம் வந்த இவரின் பெயர் என்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும் .
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 23.09.2016. வெள்ளிக்கிழமை நாளை காலை 10.30 மணியளவில் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பத்தியை அருள்வானாக! ஆமீன்