குர்ஆன் மக்தப் பற்றிய விளக்கக் கூட்டம்
காயல்பட்டினம் மொகுதூம்பள்ளியில் குர்ஆன் மக்தப் துவக்கம் சம்பந்தமான விளக்கக்கூட்டம் நடைபெற உள்ளது.
நாள் : 22-12-2012 சனிக்கிழமை இன்ஷாஅல்லாஹ்
நேரம் : காலை 9.30 மணி முதல் லுஹ்ர் வரை
இடம் : மொகுதூம் மஸ்ஜித், மகுதூம்தெரு
பெண்களுக்கான இடம் : முஹ்ஸனாத் தைக்கா, குறுக்குத் தெரு,சாளையார் நுஸ்கியார் தைக்கா, ஹாஜிஅப்பா தைக்கா தெரு, யாக்கூத்துல் அர்ஸ் தைக்கா (தோல்ஷாப் தைக்கா) குத்துக்கல் தெரு, ஜரூக்குல் ஃபாஸி தைக்கா, அம்பலமரைக்கார் தெரு.
தகவல் : மக்தப் ஒருங்கிணைப்புக் குழு, மகுதூம் ஜும்ஆ பள்ளி.
ஐந்து ஏக்கர் நிலம் ஐக்கியப் பேரவை முயற்சியில் கிடைக்கிறது.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவைக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அண்மையில் வழங்கிய மனுவில், நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளைக் கொட்டவும், பயோ கேஸ் பிளாண்ட் அமைக்கவும் நகராட்சிக்கு ஐந்து ஏக்கர் நிலம் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து முடிவுசெய்ய ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் 19-12-2012 காலை 10 மணிக்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விரிவான விவாதம் இடம்பெற்று நிறைவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேரவையின் ஆலோசகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹாஜி எஸ். செய்யிது அப்துர் ரஹ்மான் அவர்களிடத்தில் பேரவை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு நிர்ணயித்த விலைக்கே நகராட்சிக்கு வழங்குவதாக அவர் வாக்களித்தார்.
துணை மின்நிலையம் அமைய, உறுதுணை புரிந்த ஐக்கியப் பேரவையின் பயணத்தில், மேலும் ஒரு மைல்கல்லாக இச்சாதனை அமைந்துள்ளது.
இது குறித்த விரிவான தீர்மானம் பேரவையிலிருந்து கிடைத்ததும் வெளியிடப்படும்.
தகவல் உதவி : M.A.K. ஜெய்னுல் ஆப்தீன், பேரவை இணையதள ஒருங்கிணைப்பாளர்.
ஒத்திவைக்கப்பட்ட நகர்மன்றக் கூட்டம்
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 19-12-2012 அன்று மன்றக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்ட பொருள் ஏட்டில் (Agenda) 13 பொருட்கள்(Subject) இடம்பெற்றிருந்தன.
உறுப்பினர்கள் சம்சுத்தீன், ஜமால், முத்து ஹாஜரா ஆகிய மூவர் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
விதிகளின்படி போதிய உறுப்பினர்கள் இன்மையால்(கோரம்) இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மன்றத் தலைவர் அறிவித்தார்.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி : முதன்மைச்செய்தி முகவர், kayalconnection.com
நள்ளிரவில் நகரில் திருட்டு
காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் (எல்.கே. லெப்பைத் தம்பி சாலை) ஏ.கே.எம். ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வருகிறது.
இன்றுகாலை உரிமையாளர் கடை திறக்க வரும்போது முன்பகுதி கம்பி மற்றும் சட்டர் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார்.
கடைக்குள் சென்று பார்த்ததில் சிறிய தொகை பணமும், 300 கிராம் வெள்ளி நகைகளும் திருடு போய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உறுதிவாய்ந்த பாதுகாப்பு பெட்டகத்தில் தங்கநகைகள் இருந்ததால் அவைகள் திருட்டிலிருந்து தப்பின.
மேலும் இக்கடைக்கு அருகிலுள்ள பிரின்ஸ் ஜுவல்லரி கம்பிக் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் திருட்டு முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.
இதற்குமத்தியில் குத்பா பெரியபள்ளியில் நள்ளிரவில், ஹவுலுக்கு அருகிலிருந்த மின்மோட்டாரைக் கழற்றி வைத்து விட்டு சென்றுள்ளார்கள். தூக்கிச் செல்ல முடியாமல் திருட்டு முயற்சி தடைபட்டிருக்கிறது.
புகாருக்குப் பின்னால் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: முதன்மைச்செய்தி முகவர் kayalconnection.com