மஹ்லறா அரபிக் கல்லூரியின் முதல்வர், கண்ணியத்திற்குரிய பெரியவர், மௌலவி அல்ஹாஜ் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
20-12-2012 வியாழன் அதிகாலைக்கு சற்று முன்னர் சுமார் 2.30 மணியளவில் சென்னையில் வைத்து காலம் சென்ற மார்க்க அறிஞரின் ஜனாஸா, 22-12-2012 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அவரது சொந்த ஊரான கடையநல்லூர் புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மஹ்லறா அரபிக் கல்லூரியில் 40 ஆண்டு காலம் ஆசிரியப் பணியாற்றிய அவர் அதில் சுமார் 22 ஆண்டுகாலம் முதல்வராக திகழ்ந்துள்ளார். தமிழ்நாடு, கேரளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் பன்னூறு மாணவர்களை தலைசிறந்த மார்க்க அறிஞர்களாக உருவாக்கிய பெருமை அன்னாருக்கு உண்டு.
25க்கும் மேற்பட்ட தடவை புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றியுள்ளார். நாடு தழுவிய நாவலராக திகழ்ந்த அறிஞர் பெருந்தகை, கேரளா மற்றும் இலங்கை, புருணை, மலேசியா, சிங்கப்பூர், இலண்டன், பேங்காங்க் போன்ற வெளிநாடுகளிலும் மார்க்கப்பிரச்சாரத்திற்காக சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதழ்களில் தலைசிறந்த கட்டுரை எழுதுபவராகவும் திகழ்ந்தார். அவர் சார்ந்துள்ள தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மேடைகளில் அவர் ஆற்றிய உரைகளை மறக்க முடியாது.
மேடையில் தவழும் மெல்லியப் பூங்காற்றாய் உரையாற்றும் ஆளுமை மிகுந்தவர். வரலாற்று நிகழ்வுகளை வரிசைப் படுத்துவதில், அதை வாகுடன் விபரிப்பதில் தன்னிகரில்லா இடத்தை வகித்தவர்.
73 வயதை எட்டிய அவர் வாழ்நாளில் பெரும்பகுதி, காயல்பட்டினத்திலேயே கழிந்தது. அப்பெருந்தகை காயலராகவே வாழ்ந்து மறைந்தார் என்று குறிப்பிடுவது மிகப்பொருத்தமாகும்.
மஹ்லறாவின் விண்ணுயர்ந்த மினாராக்களில் பொருத்தப்பட்ட, ஒலிபெருக்கிகளில் இருந்து எழுந்த, அந்த இனிய ஓசையை இனி நாம் கேட்க முடியாது.
திருமண நிகழ்ச்சிகளில், பொது அரங்குகளில் கம்பீரத் தோற்றத்தோடு கண்ணியமான உரையோடு நம்மைக் கவர்ந்த அவரை இனி நாம் காண முடியாது என்பது வருத்தத்திற்குரியதே.
பொதிகைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பெரும்நகரம் கடையநல்லூரில் தோன்றி, அலைகள் தாலாட்டும் நெடும்புகழ் கொண்ட நெய்தல் நிலமான காயலில் அவர் ஆற்றிய சிறப்புக்குரிய மார்க்கப்பணி போற்றுதலுக்குரியது.
இருப்பினும் எல்லாம்வல்ல இறைவனின் நாட்டப்படி அவர் நம்மை விட்டு பிரிந்துள்ளதால், நாம் அனைவரும் பொறுமை கொள்வோம்.
வல்ல இறைவன் அவர்களின் மண்ணறை வாழ்வையும், மறு உலக வாழ்வையும் உயர்வாக்கி தருவானாக!. ஆமீன்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், மாணவர்கள், மஹ்லறா நிர்வாகிகள், நேசர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக. ஆமீன்.
தகவல் உதவி: மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் அப்துர்ரஹ்மான் ஆலிம் அஹ்ஸனி, பேராசிரியர், மஹ்லறா அரபிக் கல்லூரி.