தாய்லாந்து காயல் நலமன்ற (தக்வா) பொதுக்குழு கூட்டம் 10-12-2012 திங்கள் பின்னேரம் இஷா தொழுகைக்குப் பின் பேங்காக் சன் மூன் ஸ்டார் இல்லத்தில் தக்வா தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
துவக்கமாக அல்ஹாபிழ் சோனா அமீர் சுல்தான் கிராஅத் ஓதினார். மன்ற துணைச் செயலாளர் எஸ்.ஏ.ஆர். யூனுஸ் வரவேற்புரையாற்றினார்.
தலைவர் தனதுரையில் தாய்லாந்து வருகை தந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும், மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியருமான காயல் மஹபூப் காயல்பட்டினம் நகருக்கு ஆற்றியுள்ள பணிகளை குறிப்பிட்டு தக்வா சார்பில் அவரை வரவேற்பதாகவும், ஊர் நலப் பணிகளுக்கு எத்தகைய வேறுபாடுகளையும் காட்டாமல் இணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
தக்வா செயலாளர் எம்.எஸ். செய்யது முஹம்மது இக்கூட்டத்தின் நோக்கம் பற்றி குறிப்பிடுகையில், காயல்பட்டினம் DCW தொழிற்சாலை சுற்றுச்சூழலை மாசுபடுத்திவருவதை எதிர்த்து நடைபெற்று வரும் நடவடிக்கைகளை விவரித்தார்.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட மனு பற்றியும், இம்முயற்சிகளுக்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் இக்ராஃ அமைப்பை பலப்படுத்துவதற்கும் அதற்கு சொந்த இடம் வாங்கி சொந்த கட்டிடம் கட்ட, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் DCW இரசாயன தொழிற்சாலையை எதிர்த்து நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவை தருவது.
2. ரூபாய் 30 கோடியில் காயல்பட்டினத்தில் நிறைவேற்றப்பட உள்ள குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வையில், ஓராண்டு பராமரிப்பிலும் செயல்படுத்த, காயல்பட்டினம் நகராட்சியை கேட்டுக் கொள்வது.
3. இக்ராஃ வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதோடு கருத்து வேறுபாடுகள், கொள்கை முரண்பாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, ஊர் வளர்ச்சியில் ஒன்றினைந்து, செயல்பட அனைத்து காயல் நல மன்றங்களையும் வெளிநாடு வாழ் காயலர்களையும் கேட்டுக்கொள்வது.
4. காயல்பட்டினம் ஐக்கிய பேரவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, காயல்பட்டினம் நகராட்சி போன்றவை பொது விஷயங்களில் இணைந்து செயல்பட கேட்டுக் கொள்வது.
5. காயல்பட்டினம் என்ற பெயரில் திரைப்படம் எடுக்காமல் தடுக்க, உரிய முயற்சிகளை மேற்கொள்ள, ஊர் பொதுநல அமைப்புகளை, இம்மன்றம் கேட்டுக் கொள்வது.
நிறைவாக மன்ற உறுப்பினர் என்.எஸ்.ஷேக் நன்றி கூற, மௌலவி ஷாதுலி ஆலிம் ஃபாஸி துஆவுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, காயல் மகபூப் அவர்களின் உரை தனித்தலைப்பாக பின்னர் வெளியிடப்படும்.
தகவல் உதவி : எஸ்.ஏ.ஆர். யூனுஸ் மற்றும் எஸ்.எம். மிஸ்கீன் ஸாஹிப்
நிழற்படங்கள் : எஸ்.ஏ. அஹ்மது இர்ஃபான்