காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக்கூட்டம் 14-12-2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் சகோதரி ஐ. ஆபிதா B.Sc., B.Ed. இக்கூட்டத்திற்கு தலைமையேற்றார்.
காயல்பட்டினம் நகராட்சிக்கு, புதிய குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் ( Second pipeline ) அமுலாகுவதற்கு உரிய ஆரம்பகட்ட பணிகள் நிறைவுற்ற நிலையில், இக்கூட்டம் ஒப்பந்தப் புள்ளியை இறுதியாக அங்கீகரிக்கும்படியான கூட்டமாக அமைந்தது. இக்குறிப்பிட்ட பொருள் மட்டுமே இக்கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மொத்தம் 18 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நகராட்சி ஆணையர் திரு. அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் கூட்டம் நடைபெற துணை புரிந்தனர்.
சென்னை எழும்பூரிலுள்ள SriRam EPC Limited என்ற நிறுவனம் தந்துள்ள ஒப்பந்தப்புள்ளியான ரூபாய் 27,84,15,000 தொகையினை இக்கூட்டம் ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நமதூரின் குடிநீர் தேவையை பெருமளவு நிவர்த்தி செய்ய இருக்கும் இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளித் தொகையை அங்கீகரிக்கும் விதமாக நடைபெற்ற இக்கூட்டம் குறித்து மகிழ்ச்சி ஒரு புறம்.
இருப்பினும், மறுபுறம் மிகுந்த வருத்தத்திற்குரியதாக அக்கூட்டத்தில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தலைவர் மற்றும் உறுப்பினர் சிலரிடையே ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றங்களில்,ஏற்றுக் கொள்ள முடியாத, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய சொற்பிரயோகங்கள் இக்கூட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
13 ம் தேதி இரவுதான், உறுப்பினர்களுக்கு இந்த அவசரக்கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உறுப்பினர்களிடமிருந்தோ, நகராட்சி நிர்வாகத்தினரிடமிருந்தோ உரிய நேரத்தில் தகவல் கிடைக்காததால், இக்கூட்டத்தில் எமது செய்தி முகவரால் நேரடியாக தகவல் சேகரிக்க இயலாமல் போய்விட்டது.
இருப்பினும், போதிய கால அவகாசத்தில் நாங்கள் நம்பத்தகு வட்டாரங்களிலிருந்து, ஆதாரப்பூர்வமாக திரட்டிய தகவலின் அடிப்படையில் அறியவந்த இச்செய்தியினை எமது இணையதளத்தில் தெரிவிக்கின்றோம். ஆனால் விளக்கமாகவும், வெளிப்படையாகவும் இதை வெளியிட இயலாத அளவிற்கு, அக்கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்தத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவரும், நமது பண்பாட்டு மரபை பேணிக்காத்து, பொதுவாழ்வில் தொடர்புடையோர் பொறுமை காக்க வேண்டும் என்ற இலக்கணம் பேணி, எதிர்காலத்தில் நடந்து கொள்ள வேண்டும் என அன்போடு பரிந்துரை செய்கிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் நம்மிடையே ஒற்றுமையை ஓங்கச் செய்வானாக ஆமீன்.