மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 49 ஆவது அகில இந்திய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் 25-05-2014 அன்று நடைபெற்றது . 38 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிய, ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி இதில் களமிறங்கியது.
முன்னால் இந்திய தேசிய அணியின் கேப்டன் திரு.விஜயன் விளையாடும், கேரள மாநிலத்தின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான கேரள போலிஸ் – மலப்புரம் அணி USC அணியுடன் மோதியது.
போட்டியின் துவக்கம் முதலே மிகச்சிறப்பாக விளையாடிய இரண்டு அணிகளும் தங்களது திறமையான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
பலம் வாய்ந்த கேரள போலிஸ் அணியுடன் மிகவும் சிறப்பாக விளையாடிய ஐக்கிய விளையாட்டுச் சங்க இளம் வீரர்களின் ஆட்ட அணுகுமுறை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
கேரள போலிஸ் அணியினர் தொடர்ந்து கோல் அடிப்பதற்காக போராடிய போதும், ஐக்கிய விளையாட்டுச் சங்க அணியின் தடுப்பு அரணாக அவ்வணியின் தடுப்பாட்ட வீரர்கள் செயல்பட்டதால், கேரள போலிஸ் அணி கோல் அடிப்பதற்கு தடுமாறியது.
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் கேரள போலிஸ் அணியின் வீயூகங்களை சிதறடித்த ஐக்கிய விளையாட்டுச் சங்க இளம் வீரர்கள், தங்களுக்கு கோல் அடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டனர்.
சில நேரங்களில் 6 முறை தடுப்பு அரண்களை கடக்க முடியாமல் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி கேரள போலிஸ் அணியினர் பந்துகளை அடித்தனர்.
அப்பந்துகளை ஐக்கிய விளையாட்டுச் சங்க அணியின் இளம் கோல் கீப்பர் சலாஹூத்தீன் நேர்த்தியாக தடுத்து அம்முயற்சிகளை தோற்கடித்தார்.
போட்டியின் இறுதி வரை இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கேரள போலிஸ் அணியின் கோல் கீப்பர் கோல் கம்பத்தில் உள்ள கோட்டிற்கு வெளியே வந்து பந்துகளை தடுக்க முயற்சி செய்தார்.
இது விதிகளின் படி தவறாகும். ஆனால் நடுவர் இதனை சரிவர கண்காணிக்கவில்லை என்றே பலர் கூறுகின்றனர். இதன் இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரள போலிஸ் அணி வெற்றியடைந்தது.
பரிசளிப்பு நிகழ்ச்சி
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் தலைவர் திரு.கிளிட்டஸ் பாபு, மாநில பொதுச் செயலாளர் திரு.ரவிக்குமார் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் துணைச் செயலாளர் ஜனாப்.S.M.உஸைர் ஹாஜி வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் தலைவர் மற்றும் செயலாளர், வெற்றிபெற்ற அணியின் பயிற்சியாளர், வெற்றிக்கு முனைந்த அணியின் பயிற்சியாளர் மற்றும்
இறுதிப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவர் திரு.எட்வின் ஜோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இப்போட்டித் தொடரின் சிறந்த வீரர்களுக்கான பரிசுகளை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் முன்னால் வீரர்கள் மர்ஹூம் கத்தீபு ஹாமிது மற்றும் M.அல்தாஃப் ஆகியோர்களின் நினைவாகவும்,
ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் மறைந்த தலைவர் மரியாதைக்குரிய L.கனி அவர்களின் நினைவாகவும் வழங்கப்பட்டன.
பின்னர் வெற்றிபெற்ற, வெற்றிக்கு முனைந்த அணிகளின் வீரர்களுக்கு தனிநபர் பரிசு, அணிக்கான ரொக்கப் பரிசு ரூ.50,000 மற்றும் ரூ.30,000 அணிக்கு சொந்த கோப்பை மற்றும் சுழற்கோப்பை ஆகியவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக தலைவர் திரு.ஸ்ரீதர் ரொட்ரிகோ, நெல்லை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் திரு.நோபுல்ராஜன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.A.D.K.ஜெயசீலன்,ஐக்கிய விளையாட்டுச் சங்க நிர்வாகிகளுல் ஒருவரான மருத்துவர் அஷ்ரஃப்,
ஐக்கிய விளையாட்டுச் சங்க தலைவர் ஜனாப்.P.S.A.பல்லாக்கு லெப்பை, துணைத் தலைவர் ஜனாப்.பீர் முஹம்மது, செயலாளர் ஜனாப்.P.S.M.இல்லியாஸ், துணைச் செயலாளர் ஜனாப்.ரஃபீக் மற்றும் முன்னால் செயலாளர் ஜனாப்.பாளையம் S.A.முஸ்தஃபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை ஜனாப். பல்லாக் அப்துல் காதர் நெய்னா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
வெற்றி வாய்ப்பினை பெறாவிட்டாலும் , இறுதி போட்டி வரை முயற்சியுடன் முன்னேறி வந்த USC அணியினரையும் , வெற்றி பெற்ற அணியினரையும் உளமார பாராட்டி வாழ்த்துகிறோம் .
நிலைப்படம் : முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com
தகவல் : M.ஜஹாங்கிர்