காயல்பட்டினம் நகர்மன்ற நவம்பர் மாத கூட்டம் பற்றிய சுருக்கமான தகவலை ஏற்கனவே (1.12.2012) வெளியிட்டிருந்தோம்.
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நிறுத்தி வைக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட (தீர்மானங்களுக்கான) பொருட்கள் (Subject) பற்றிய சுருக்கத் தொகுப்பிது.
நகராட்சி புதியக் குடிநீர் மேம்பாட்டுத் (2nd Pipeline) திட்டத்தை அமுல்படுத்த 27 கோடியே 84 லட்சத்து 15 ஆயிரம் என குறைந்த ஒப்பந்தப்புள்ளியாக வந்ததை, நகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலக ஒப்பந்தப்புள்ளி சீராய்வுக் குழுவின் (Tender Award Committee) முடிவுக்கு, பரிந்துரை செய்ய இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் இதுவரை நடைபெற்ற பணிகளுக்கான செலவுத் தொகை மற்றும் இனி ஆற்றவேண்டிய பணிகளுக்கு மதிப்பீட்டுத் தொகை ஆகியவைகளுக்கும் ஓராண்டு நகராட்சி நிர்வாக அறிக்கைக்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஓரிரு புதிய சாலைகள் அமைக்க – குடிநீர் வசதியை சீர் செய்ய – பொது சுகாதாரத்தை மேலும் மேம்படுத்த – தெரு விளக்குகளை அதிகரிக்க மற்றும் பல்வேறு திட்டங்கள் இவ்வூரில் இடம்பெற இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
புதிய குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு, நகர்மன்றத்தின் பங்காக வழங்கிய நிதி போக, இன்னும் வழங்கவேண்டிய நிதி அதிகமாகத் தேவைப்படுவதாலும், நிதிப்பற்றாக் குறையாலும், புதிதாக போடவேண்டிய பல்வேறு சாலைகள் பற்றிய கோரிக்கைகள் இக்கூட்டத்தில் தீர்மான வடிவம் பெறவில்லை.
அவைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், பின்னர் பரிசீலிக்கப்படுமென்றும், தற்போது ஒத்திவைக்கப்படுவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
நகராட்சிக் கூட்ட நடவடிக்கைகளை அசைபடப் பதிவாக்குதல் ( Video Recording ) மற்றும் சில பொருட்கள் ( Subjects ) தீர்மான வடிவம் பெறவில்லை. ஊடகங்கள் நகர்மன்றக் கூட்டச் செய்தியைச் சேகரிக்க நகராட்சிக்கு அனுமதிக் கேட்டு மனுச் செய்ய வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
விவாதத்திற்குரிய பொருட்களாக எண்ணிக்கையில் 110ஆக இக்கூட்டத்தில் இடம்பெற்றிருந்தது. அனைத்தையும் தனித்தனியாகக் குறிப்பிடுவதாயின் மிகவும் நீளுமென்பதால், மிகச் சுருக்கமாக நகர்மன்றக் கூட்டத் தொகுப்பை நேயர்களுக்கு வழங்கியுள்ளோம். முழுமையானக் கூட்ட நடவடிக்கையினை தெரிய விரும்புவோர் நகராட்சிக்கு சொந்தமான www.municipality.tn.gov.in/kayalpattinam/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தீர்மானங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெற திறந்த மனதோடு வாழ்த்துகிறோம்.
தகவல் உதவி : முதன்மைச் செய்தி முகவர் மற்றும் நகர்மன்றக் கூட்டப் பொருள் ஏடு (Meeting Agenda)